சென்னை: என்ஐஆர்எஃப் தரவரிசை பட்டியலில் ஒட்டுமொத்த சிறந்த கல்வி நிறுவன பிரிவில் சென்னை ஐஐடி தொடர்ந்து 7-வது முறையாக தேசிய அளவில் முதல் இடம் பிடித்துள்ளது. மாநில பொது பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது.
தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் ‘என்ஐஆர்எஃப்’ தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டுக்கான என்ஐ ஆர்எஃப் தரவரிசை பட்டியலை டெல்லியில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு: ஒட்டுமொத்த சிறந்த கல்வி நிறுவனம் என்ற பிரிவில் சென்னை ஐஐடி முதல் இடம் பிடித்துள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி, மும்பை ஐஐடி, டெல்லி ஐஐடி அடுத்த இடங்களில் உள்ளன. சென்னை ஐஐடி தொடர்ந்து 7-வது ஆண்டாக முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைக்கழகங்கள் பிரிவில், பெங்களூரு ஐஐஎஸ்சி முதல் இடம் பிடித்துள்ளது. டெல்லி ஜேஎன்யு 2-ம் இடம் பிடித்துள்ளது. கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் 8-வது இடம் பெற்றுள்ளது.
மாநில பொது பல்கலைக்கழகங்கள் பிரிவில் மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. கோவை பாரதியார் பல்கலைக்கழகம் – 10, காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழகம் – 14, சென்னை பல்கலைக்கழகம் 18-வது இடத்தில் உள்ளன.
திறந்தநிலை பல்கலைக்கழ கங்கள் தரவரிசையில் டெல்லி இக்னோ முதல் இடம், கர்நாடகா தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகம் 2-ம் இடத்தில் உள்ளன. சிறந்த 10 கல்லூரிகள் பிரிவில் டெல்லி ஹிந்து கல்லூரி, டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதல் 2 இடங்களில் உள்ளன. கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி – 9, கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி – 10, சென்னை லயோலா கல்லூரி – 14,சென்னை மாநிலக் கல்லூரி – 15, தாம்பரம் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி – 16-வது இடத்தில் உள்ளன.
பொறியியல் பிரிவில் சென்னை, டெல்லி, மும்பை ஐஐடிக்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. திருச்சி என்ஐடி – 9, சென்னை எஸ்ஆர்எம் – 14, வேலூர் விஐடி – 14-வது இடத்தில் உள்ளன. மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ், சண்டிகர் முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம், வேலூர் சிஎம்சி முதல் 3 இடங்களை பிடித்துள்ளன. பல் மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ், சென்னை சவீதா கல்வி நிறுவனம் முதல் 2 இடங்களை பிடித்துள்ளன.
ஆராய்ச்சிப் பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதல் இடம், சென்னை ஐஐடி 2-ம் இடம், புதுமை கண்டுபிடிப்புகள் பிரிவில் சென்னை ஐஐடி முதல் இடம், அண்ணா பல்கலைக்கழகம் 9-வது இடம் பெற்றுள்ளன. கட்டிடக்கலை பிரிவில் ரூர்க்கி ஐஐடியும், சட்டப் பிரிவில் பெங்களூரு தேசிய சட்டக் கல்லூரியும் முதல் இடத்தில் உள்ளன. மேலாண்மைக் கல்வி பிரிவில் அகமதாபாத், பெங்களூரு, கோழிக் கோடு ஐஐஎம்கள் முதல் 3 இடம் பெற்றுள்ளன. சென்னை ஐஐடி 13-வது இடம் பிடித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியல் 2025 – உயர்கல்வி சிறந்த தமிழகம் என மீண்டுமொரு முறை நிரூபணமானது. இந்தியாவின் தலைசிறந்த 100 உயர்கல்வி நிறுவனங்களில் 17, தலைசிறந்த 100 கல்லூரிகளில் 33, தலைசிறந்த 50 மாநில பல்கலைக்கழகங்களில் 10 என இப்பட்டியல் அனைத்திலும் அதிக கல்வி நிறுவனங்களுடன் தமிழகம் முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது.
அனைவரையும் உள்ளடக்கிய – அனைத்துப் பகுதிகளுக்கும் பரவிய – அனைத்துப் பின்னணியில் இருந்து வரும் மாணவர்களையும் வரவேற்று வாய்ப்பளிக்கும் தமிழகத்தின் உயர்கல்விச் சூழலுக்குக் கிடைத்த வெற்றி இது’’ என்று தெரிவித்துள்ளார்.