புதுடெல்லி: திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கூடுதல் விடுதிகள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய கல்வி அமைச்சகம் ரூ.385.27 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உள்கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளுக்காக உயர் கல்வி நிதி நிறுவனம் மூலம் ரூ.385.27 கோடி வழங்க கல்வி அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதன்மூலம், புதிதாக கல்வி கட்டிடம் கட்ட ரூ. 96.40 கோடியும், 300 படுக்கைகள் கொண்ட பெண்கள் விடுதியை கட்ட ரூ. 46.63 கோடியும், 300 படுக்கைகள் கொண்ட ஆண்கள் விடுதியை அமைக்க ரூ.46.91 கோடியும், அறிவியல் கருவி மையம் அமைக்க ரூ.19.95 கோடியும், அறிவியல் கருவிகள் கொள்முதலுக்கு ரூ.16.84 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நிர்வாக கட்டிட விரிவாக்கத்துக்கு ரூ.46.16 கோடியும், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் விரிவாக்கத்துக்காக ரூ.62.97 கோடியும், 400 படுக்கைகள் கொண்ட ஆராய்ச்சியாளர்களுக்கான விடுதியை அமைக்க ரூ.42.60 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.