திருப்பத்தூர் அருகே வகுப்பறைகள் சேதமடைந்ததால் கோயில் வளாகத்தில் மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் புதிய வகுப்பறைகளை கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் ஊராட்சி பழைய அத்திக்குப்பம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியை ச் சேர்ந்த மாணவ – மாணவிகள் அதேபகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்ற னர்.
இப்பள்ளி கட்டிடமானது பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் தற்போது சேதமடைந்து, மேற்கூரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது. புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த ஜூன் மாதம் சேதமடைந்த வகுப் பறை கட்டிடங்கள் முழுமையாக அகற்றப்பட்டு அங்கு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
இதையடுத்து, வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்கள் கல்வி கற்க இடம் இல்லாமல் தவித்தனர். இதனை சமாளிக்க 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஒரு கோயில் வளாகத்தில் அமர வைக்கப்பட்டு அங்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த தொடங்கினர்.
மேலும், 4-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு மாணவர்கள் இடிந்த நிலையில் இருந்த வகுப்பறை மேற்கூரைக்கு பதிலாக தகர ஷீட்டுகள் பொருத்தப்பட்டு அங்கு மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் பயின்றனர்.
புதிய வகுப்பறை கட்டும் பணிகள் தொடங்காததால் கோயில் வளாகத்திலும், தகர ஷீட் அறைகளில் மாணவர்கள் பாடம் பயிலும் நிலை ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ந்தது. இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பெற்றோர் கூறும்போது, ‘‘ எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறை இல்லாத கட்டிடத்திலும், கோயில் வளாகத்திலும் அமர்ந்து கல்வி கற்கின்றனர். இது தெரிந்தும் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் வகுப்பறை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் கிராமத்தில் இருந்து வேறு பள்ளிக்கு செல்ல வேண்டுமென்றால் நீண்ட தொலைவுக்கு போக வேண்டிய நிலை இருப்பதால் வேறு வழியின்றி இந்த நடுநிலை பள்ளியில் எங்கள் குழந்தைகளை கல்வி பயில அனுப்பி வருகிறோம்.
ஒரு மாதத்துக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டும் பணிகளை விரைவாக தொடங்கி மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கல்வி துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ பொம்மிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய அத்திக் குப்பம் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு தற்போது பணிகளை தொடங்கியுள்ளோம். இப்பணிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டிடம் விரைவில் கொண்டு வரப்படும்’’ என்றனர்.