சென்னை: தக்கர்பாபா வித்யாலயாவில் ஐடிஐ படிக்கும்போது தொழிற்பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு ரூ.17 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
சென்னை, தியாகராய நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் ஐடிஐ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் செயல் இயக்குநர் வி.எஸ்.அசோக், மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட பின் அவர் பேசியதாவது: தற்போதைய வாழ்வில் உண்மை, நேர்மை போன்றவை அனைவரிடமும் இருப்பதில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. இப்போதுதான் நாம் உண்மைக்கு உரித்தான மகாத்மாக காந்தியை நினைவுகூர வேண்டும். செய்யும் வேலையை உண்மை, நேர்மையுடன் செய்ய வேண்டும். அப்படி பணியாற்றி பெற்றோர், கல்வியறிவு தந்த தக்கர் பாபா வித்யாலயாவையும் பெருமையடையச் செய்ய வேண்டும்.
நான் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன். ஸ்ரீசிட்டியில் இருக்கும் தொழிற்சாலையில் 45 சதவீதம் பெண்கள் பணியாற்றுகின்றனர். அடுத்த முறை தொழிற்பயிற்சிக்காக மட்டுமின்றி, நிறுவனத்தில் பயிலும் அனைத்து மாணவிகளும் குழுவாக கட்டாயம் தொழிற்சாலையைப் பார்வையிட வேண்டும். இதன் மூலம் அவர்களின் கற்றல் திறன் விரிவடையும். இவ்வாறு அவர் பேசினார்.
தக்கர்பாபா வித்யாலயா செயலர் பி.மாருதி பேசும்போது, “ஐடிஐ படிப்பவர்களுக்கு வேலை, பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு அரசு ஏராளமான சலுகைகளை வழங்குகிறது. குறிப்பாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்கள், 10-ம் வகுப்பில் மொழிப் பாடத்தில் மட்டுமே தேர்ச்சியடைந்தாலே 10-ம் வகுப்பு தேர்ச்சிக்கான சான்று வழங்கப்படுகிறது. அவர்கள் வேலைவாய்ப்பு மையத்திலும் அரசு வேலைக்காக பதிவு செய்ய முடியும்.
இதுமட்டுமின்றி தொழிற்பயிற்சியின்போது சிறப்பாக பணியாற்றுவோருக்கு வேலையும் வழங்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுகின்றனர். தற்போது மாணவர் சேர்க்கை தக்கர் பாபா வித்யாலயாவில் நடைபெறுகிறது” என்றார்.
இந்நிகழ்வில், ப்ளூ ஸ்டார் சிஸ்ஆர் பிரிவு மேலாளர் அனிஷா மஜும்தார், தக்கர் பாபா வித்யாலயா உதவி பயிற்சி அலுவலர் ஜி.பஞ்சமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் சுந்தரவடிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.