நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். ரவீந்திரநாத் தாகூர் பள்ளிக்குச் செல்ல முரண்டு பிடித்ததால் வீட்டிலிருந்தே முறைசாராக் கல்வி அளிக்கப்பட்டவர். 17 வயதில் உயர்கல்வி பெற இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு; ஆனால் அங்கும் படிப்பைத் தொடர முடியாமல் இடைநின்றவர். பின்னாளில் தானே ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவினார். தனது சொந்த மண்ணான மேற்கு வங்கத்தில் சாந்திநிகேதன் என்கிற பரிசோதனை முறைப் பள்ளியை 1901இல் தொடங்கினார்.
எட்டு வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர், பின்னாளில் இந்திய தேசிய கீதம், வங்க தேசத்தின் தேசிய கீதம் ஆகியவற்றை இயற்றியது மட்டுமல்லாமல், இலங்கையின் தேசிய கீதம் உருவாக உந்துதலாகத் திகழ்ந்தார். கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் புள்ளியில் உயிர்பெற்ற அவருடைய கவிதைகளும் பயணக் கட்டுரைகளும் இரண்டு சுயசரிதைகளும் காலத்தை வென்றவை.
உலக நாடுகள் முழுவதும் பயணித்துச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி யவர். 1913இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றுக்கொண்ட பிறகு, அமெரிக்காவுக்குச் சென்று அங்கே தனது பள்ளியைப் பற்றி ‘My School’ என்கிற தலைப்பில் அவர் ஆற்றிய உரை உலகப் புகழ்பெற்றது.
ஆனாலும், அவர் பள்ளி தொடங்கியபோது, பலர் சந்தேகப் பார்வையுடனேயே அணுகினர். முறைசார்ந்த கல்வி என்றாலே விழுந்தடித்து ஓடிய ஒரு மனிதரால் எப்படிப் பள்ளிக்கூடம் நடத்த முடியும் என்கிற உள்நோக்கத்துடன், “உங்களுடைய பள்ளியின் நோக்கம் என்ன?” என்று தாகூரிடம் கேட்காதவர்கள் இல்லை.
அண்மைக் காலமாகக் குழந்தை மையக் கற்றல் என்கிற சொற்கள் அதிகம் முணு முணுக்கப்படுகின்றன. பாவ்லோ ஃபிரேய்ரி போன்ற அயல்நாட்டு அறிஞர்கள் முன்னிறுத்திய புரட்சிகரமான கல்வியியல் தத்துவங்களே இங்கும் பரிந்துரைக்கப் படுகின்றன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே குழந்தை மையக் கற்றலுக்கு இந்தியச் சூழலில் செயல்வடிவம் அளித்தவர் தாகூர்.
குழந்தைகளுக்குப் பிடித்தமான மரம் ஏறுதல், ஆடிப் பாடுதல், நாடகத்தில் நடித்தல், கைவினைப் பொருள்களை உருவாக்குதல், இயற்கைச் சூழலில் உலாவியபடி கற்றல், கல்விச் சுற்றுலா செல்லுதல் போன்றவற்றை சாந்தி நிகேதன் பள்ளிக்கூடத்தில் நடைமுறைப்படுத் தினார். இவற்றின் வழி ஆசிரியர் பாடம் நடத்த மாணவர்கள் கைகட்டி, வாய்மூடிப் படிக்கும் கட்டுப்பாடு தகர்க்கப்பட்டது.
சுதந்திரமாகச் சிந்தித்து, கேள்வி எழுப்பி, சரிக்குச் சமமாக விவாதித்து விடை கண்டடையும் கற்றல் முறை இங்கு பின்பற்றப்பட்டது. இதனால், சாந்தி நிகேதன் பள்ளியின் மாணவர்கள் படைப் பூக்கமும் கருத்தாழமும் பேச்சாற்றலும் நிரம்பியவர்களாக ஒளிர்ந்தார்கள். அமர்த்திய சென், சத்யஜித் ராய், மகாஸ்வேதா தேவி போன் றோர் இதன் புகழ்பெற்ற மாணவர்கள். தற்போது சாந்தி நிகேதன் பள்ளிக்கூடம் உலக மரபுச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.