பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவி தமிழில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்சே திவாரி, ரீனா தேவி தம்பதி, கடந்த 2019ம் ஆண்டு முதல், குடும்பத்துடன் சென்னை பல்லாவரத்தை அடுத்த கவுல் பஜார் வந்து தங்கி வருகின்றனர். தனஞ்சேதி வாரி அதே பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்த நிலையில், அவரது மனைவி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்களது இரண்டாவது மகள் ஜியா குமாரி (16), கவுல் பஜார் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது. இதில், ஜியா குமாரி 467 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக வந்துள்ளார். குறிப்பாக தமிழ் பாடத்தில் 93 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மாணவி ஜியாகுமாரி கூறியதாவது; அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் நான் கல்வியை கற்ற போது முதலில் எனக்கு கடினமாகத் தான் இருந்தது. அதன் பிறகு விடா முயற்சி செய்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உதவியுடன் தமிழை எளிதாக கற்றுக் கொண்டேன். 7 வருடங்களுக்கு முன்பு வேலை நிமிர்த்தமாக குடும்பத்துடன் தமிழகம் வந்த நிலையில், பல்லாவரத்தில் தங்கி படிக்கும் சூழல் ஏற்பட்டது.
அதன் அடிப்படையில் பல்லாவரம் கவுல் பஜார் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்தேன். தமிழில் 97 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர்பார்த் தேன். ஆனால் 93 தான் மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். அதிக மதிப்பெண்கள் பெற்றது எனக்கு பெருமையாக உள்ளது. மருத்துவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்படிப்பை தொடர உள்ளேன் என்றார்.
பீகாரை சேர்ந்த மாணவி தமிழகத்தில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் பெற்றதை அறிந்த அவர் பயின்ற பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொது மக்கள் ஆகியோர் சால்வை அணிவித்து, கேக் வெட்டி தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.