புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளிகளில் மாணவிகள் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சுடிதாருக்கு மேல் ஓவர்கோட் அணிய கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மீது ஒவர்கோட் அணியும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் சீருடையில் மாற்றம் கொண்டுவர கடந்த 2013ம் ஆண்டு கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் சீருடை மாற்றம் கைவிடப்பட்டது.
அதே நேரத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஓவர்கோட் அணியும் முறை நடைமுறையில் உள்ளது. ஒவர்கோட் சீருடை மாணவிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி கல்வித் துறை துணை இயக்குனர் கவுரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதில், “அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணிய வேண்டும். இதற்கான வடிவமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து வடிவமைப்பை காண்பித்து மாணவர்கள் ஒவர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும்” என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. தற்போது மாணவிகள் ஒவர் கோட் அணிய தேவையான துணியும் வழங்கப்பட உள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.