மதுரை; தமிழகம் முழுவதும் உள்ள 1,138 ஆதிதிராவிடர் பள்ளிகளில் கடந்த பல ஆண்டாக 360 தலைமை ஆசிரியர்கள் உள்பட 2,075 பணியிடங்கள் காலியாக உள்ளன. நிரந்தர ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களை கொண்டு சமாளிப்பதால், ஆதிதிராவிடர் மாணவர்களின் கல்வி தரமும், அவர்கள் எதிர்காலமும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கடந்த 1988-ம் ஆண்டு சமூக நலத் துறையிலிருந்து பிரிந்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் கல்வியறிவு, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டையும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் 833 தொடக்கப்பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 98 மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 1,138 எண்ணிக்கையிலான பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த 2024-25 கல்வியாண்டின் நிலவரப்படி மொத்தம் 98,124 மாணவர்கள், இப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
இதே 2023-24 கல்வியாண்டில் 1.01 லட்சமும், 2022-23 கல்வியாண்டில் 1.06 லட்சமும், 2021-22 கல்வியாண்டில் 1.23 லட்சமாக மாணவர்களின் எண்ணிக்கை இருந்து வந்ததது. கடந்த காலங்களை ஒப்பிடும்போது மூன்றே ஆண்டுகளில் சுமார் மாணவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சம் குறைந்துள்ள தகவல், மதுரை கே.கே.நகரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கார்த்திக் சேகரித்த ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து கார்த்திக் கூறுகையில், ‘‘மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்ததற்கு நிரந்தர ஆசிரியர்கள் பற்றாகுறை, தகுதியுமில்லாத தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்களைக் கொண்டு பள்ளி செயல்படுவதே முக்கிய காரணம். இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நல ஆணையராகத்தின் ஆர்.டி.ஐ மூலமாக பல்வேறு புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. இப்பள்ளிகளில் 360 தலைமை ஆசிரியர்கள், 483 பட்டதாரி ஆசிரியர்கள், 1060 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட மொத்தம் 2075 பணியிடங்கள் காலியாக உள்ளன. உண்மைநிலை இப்படியிருக்க, 875 பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாக அரசு மழுப்பல் தகவல்களை கொடுக்கின்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்படும் நிதியை முறையாகவும், முழுமையாகவும் கல்விக்கென்று செலவு செய்வதை அரசு தவிர்த்து வருகிறது. இதன் எதிரொலியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்கள் நியமித்தால் செலவு ஏற்படும் என்று, குறைந்த சம்பளத்தில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாக திறமையும், தகுதியுமில்லாத 829 பேரை தற்காலிக தொகுப்பூதிய சம்பளத்தின் அடிப்படையில் வெறும் ரூ.8,73,00,000 (எட்டு கோடியே எழுபத்தி மூன்று லட்சம்) மட்டுமே ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு தேர்தெடுத்துள்ளனர்.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.18,000-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15,000-ம், இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12,000-ம் ஊதியம் வழங்குகின்றனர். சிறந்த அடிப்படைக் கல்வி கிடைக்காமல் ஆதிதிராவிடர் மாணவர்கள் கடும் சிரமத்தையும் சவால்களையும் சந்தித்து வருகின்றனர்.
இப்பள்ளிகளில் பணியாற்றுவதற்காக தலைமை ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், கணினி பயிற்றுனர்கள் என்று மொத்தம் 5,995 நிரந்தர பணியாளர்கள் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிர்ணயிக்கப்பட்ட 5,995 நிரந்தர பணியாளர்கள் பணியிடங்களில் இதுவரை 2,075 பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பபடாமல் உள்ளது’’ என்றார்.