சென்னை: பள்ளிகளில் செயல்படும் பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்க வேண்டுமென மாநிலக் கல்விக்கொள்கை குழுவினர் பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை- 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகள் கேட்டறிந்து சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர்.
அதன்பின் 10 மாதங்கள் கழித்தே மாநிலக் கல்விக் கொள்கை வரைவறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் 2024 ஜூலை 1-ல் சமர்ப்பித்தனர். அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தக் கூடாது என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகள் கேட்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஓராண்டாகியும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘தமிழகத்தில் சில தனியார் பள்ளிகளில் நீட், ஜேஇஇ உட்பட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அல்லது பாடங்களை நடத்தாமலேயே மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுக்கு மட்டும் பயிற்சி அளிக்கின்றன. இதனால் பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் இந்த மையங்களின் செயல்பாடுகளை வரையறுக்க குழு அமைத்து முறைப்படுத்த வேண்டுமென கல்விக்கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது’ என்றனர்.
இந்தக்குழு கடந்த ஜூலையில் கல்விக்கொள்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. எனினும், இதன் பரிந்துரைகள் இதுவரை பொதுவில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.