சென்னை: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பரவும் தகவல் குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் சுமார் 31,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சுமார் 19 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதற்கிடையே, நடப்பாண்டு மாணவர் சேர்க்கை இல்லாத 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக நீலகிரி 17, சிவகங்கை 16, திண்டுக்கல் 12, சென்னை, ஈரோடு, மதுரை தலா 10 என்றவாறு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூடப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறந்து தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியது: “மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளில் 5 வயது நிரம்பிய குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. அந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனால் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளுக்கும் இத்தகைய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே 868 அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின்றி மூடப்பட்டுள்ளன.
அதேபோல், மூடப்பட்ட அரசுப் பள்ளிகளில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் திறன்மிகு வகுப்பறைகள் உள்ளன. சேர்க்கை பூஜ்ஜியமாக உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அருகில் உள்ள வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். 207 பள்ளிகளும் தற்காலிகமாகவே மூடப்பட்டுள்ளன. இதற்கு முன் மூடப்பட்ட பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்தி திறக்கப்பட்டுள்ளன. அந்த நடவடிக்கை இந்த ஆண்டும் தொடரும். எனவே, அரசுப் பள்ளிகள் மூடப்பட்டதற்கு மக்கள் நகரங்களை நோக்கிய இடப்பெயர்ந்ததும், 5 வயது நிரம்பிய குழந்தைகள் எண்ணிக்கை குறைந்ததும் காரணமாகும்” என்றனர்.
இதனிடையே, திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ், “அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில், மாணவர்கள் இல்லாததால் தமிழகம் முழுவதும் 207 பள்ளிகள் மூடப்பட உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல். அரசுப் பள்ளிகளில் இன்னும் மாணவர் சேர்க்கை பூர்த்தி அடையவில்லை. ஒரு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இல்லை எனில், அதற்குரிய காரணம் குறித்து ஆராய்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி, அந்தப் பள்ளி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.