சென்னை: மாநிலக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு 11 மாதங்களாகிவிட்ட சூழலில், அதை அமல்படுத்தாமல் தமிழக அரசு தொடர்ந்து காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020 தமிழக அரசுதொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்விக் கொள்கை வடிவமைப்பு தொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தனியார் பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கருத்துகள் கேட்டறிந்தனர்.
இதையடுத்து கல்விக் கொள்கைக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவறிக்கை தயாரிக்கும் பணிகளில் குழுவினர் ஈடுபட்டனர். அதன்படி மாநிலக் கல்விக் கொள்கை குழுவினர் சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர். எனினும், வெள்ளப் பாதிப்புகள், மக்களவைத் தேர்தல் பணிகளால் வரைவு அறிக்கை வெளியிடுவதில் தாமதம் நிலவியது. அதன்பின் மாநிலக் கல்விக் கொள்கை வரைவறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம், ஒய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் ஜூலை 1-ம் தேதி சமர்பித்தனர்.
அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக்குதல், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தக்கூடாது, கல்வி வளாகங்களில்போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்க்க சிறப்பு நடவடிக்கை என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகள் கேட்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 11 மாதங்களாகியும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படாதது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள், பேராசிரியர்கள் சிலர் கூறும்போது, ‘‘மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்ப்பதாக கூறுகிறது. ஆனால், அதிலுள்ள பல்வேறு திட்டங்கள் ஏற்கெனவே வெவ்வேறு பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைசரிசெய்ய மாநிலக் கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் தமிழக அரசும் தீவிரம் காட்ட வேண்டும். அதற்கு முதலில் வரைவறிக்கையை பொது தளத்தில் வெளியிட வேண்டும். அதுதொடர்பான அனைவரின் கருத்துகளை கேட்டு பெற்று, திருத்தங்கள் செய்து அவற்றை நடப்பு கல்வியாண்டிலேயே செயல்முறைக்கு கொண்டுவர வேண்டும். அதற்கான பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும்’’என்றனர்.