தொடர்ந்து 2-வது நாளான நேற்று நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் முன் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதை மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்களும் ஆய்வு செய்தனர். ஒட்டுமொத்தமாக ஆர்டிஇ ஒதுக்கீட்டில் 70,449 குழந்தைகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திர மோகன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: ”தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் வெளிப்படையான முறையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 7,717 பள்ளிகளில் ஆர்டிஇ ஒதுக்கீட்டில் சேர 82,016 குழந்தைகள் விருப்பம் தெரிவித்தன. அதில் விதிமுறைகளின்படி எல்கேஜி வகுப்பில் சேர 70,350 குழந்தைகளுக்கும், ஒன்றாம் வகுப்பில் சேர 99 பேருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

