சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (டெட்) ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கியது. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் விண்ணப்பித்து வந்தனர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்று முடிவடைந்தது. இந்நிலையில், தேர்வர்களின் வேண்டுகோளை ஏற்று, இந்த அவகாசம் நாளை (செப்.10) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காத ஆசிரியர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வாரியம் ஏற்கெனவே அறிவித்தபடி, நவம்பர் 15-ம் தேதி டெட் முதல் தாள் தேர்வும், 16-ம் தேதி 2-ம் தாள் தேர்வும் நடைபெற உள்ளன.
தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடவும், அதை தொடர்ந்து டிசம்பர் மாதத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.