சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் சென்னையில் நடைபெற்று வருவதாகவும், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் வகுப்புகளில் பங்கேற்று பயனடையுமாறும் மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் அனைத்து வகை மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு நடத்தப்படும் குரூப்-2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் கடந்த 21-ம் தேதிமுதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 முதல் மதியம் 1 மணிவரை பயிற்சி வழங்கப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆக. 13-ம் தேதியாகும்.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் சென்னையை சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் இணைய வழியில் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பப்படிவ நகலுடன், ஆதார் அட்டை நகல், புகைப்படம் ஆகியவற்றுடன் பயிற்சியில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். பயிற்சிக்கு கட்டணமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.