எப்போதும் போல டிஎன்பிஎஸ்சி தேர்வு மிக நேர்த்தியாக நடந்து முடிந்துள்ளது. தேர்வுகளைத் திறம்பட நடத்துவதில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நிபுணத்துவம் மீண்டும் ஐயமற நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. ஆணையத்துக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 200 கேள்விகள் 300 மதிப்பெண்கள்.
கால அவகாசம் 3 மணி நேரம். எளிதாக்கப்பட்ட விடைத்தாள். எல்லாம் சரிதான்; ஆனால், டிஎன்பிஎஸ்சியின் கடந்த சில தேர்வுகளில் நாம் கண்ட சுவாரஸ்யமான புத்திசாலித்தனம், மன்னிக்கவும், இந்த முறை தென்படவே இல்லை. இதுகூடப் பரவாயில்லை; ஏராளமான முரண்கள், பிழைகள் – கேள்வித்தாள் முழுதும் நிரவிக் கிடக்கின்றன. ஒருவகையில் இது நமக்கு மிகப்பெரிய ஏமாற்றம், அதிர்ச்சி. மிகுந்த அனுபவம் மிக்க தேர்வாணையம் எப்படி கவனிக்காமல் விட்டது…?
இது குறித்து விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்னர் – ‘கேள்வித்தாள், எப்படி’..? அநேகமாக எல்லாப் பகுதிகளிலும் ‘நேரடி வினாக்கள்’ மட்டுமே இருந்தன. அதனால், முறையாகத் தேர்வுக்குத் தயாராகிச் சென்றவர்கள், மிக நிச்சயமாகத் தேர்ச்சி பெறுவார்கள். நம்பிக்கையுடன் இருக்கலாம்.
கணிதம், அறிவியல், வரலாறு, சுற்றுச்சூழல், பொருளாதாரம், அரசமைப்பு சட்டம், மத்திய மாநில அரசுத் திட்டங்கள், இலக்கியம் குறிப்பாக திருக்குறள் என்று, அறியப்பட்ட/ அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து சற்றும் நழுவிச் செல்லாத கேள்விகளே இடம் பெற்று இருந்ததால் ‘நுண்ணறிவு’க்கு வேலையில்லாமல் போய்விட்டது.
அறிவியல் பகுதியில் மருத்துவ அறிவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது ஒரு வகையில் ஆரோக்கியமான நன்முயற்சி. உயிர் வேதியியல் ஆக்சிஜன், பச்சயம், பூகம்ப விளைவு, வன வகைகள் குறித்த கேள்விகள் தேர்வர்களுக்கு எளிமையாக இருந்திருக்கும். நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது என்று இல்லாமல், இவர்களுக்கு எந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு தரப்பட்டது? என்று வினவியமை பாராட்டுக்கு உரியது. பொதுக் கணிதத்தில் அநேகமாக எல்லாக் கேள்விகளுமே பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை ஆகவே இருந்தன.
ரெப்போ வட்டி விகிதம், நாட்டின் வளர்ச்சி உட்கட்டமைப்பு வசதிகள் என்று வழக்கமான பாதையிலேயே பொருளாதாரம் பயணித்தது. இந்திய, தமிழக அரசியல் பகுதியில் புதிதாக எதுவும் இல்லை. சுதந்திரப் போராட்ட காலம் கணிசமாக இடம்பெற்றுள்ளது. ஒரு குறிப்பிட்ட அரசியல் இயக்கம்/ தலைவர் குறித்த கேள்விகள், வழக்கத்தை விடவும் மிக அதிகமாய் இருந்தன. டிஎன்பிஎஸ்சி கேள்வித் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு ஒரு தலைப்பட்ச அரசியல் நெடி தூக்கலாகவே இருந்தது. தவிர்த்து இருக்கலாம். ஒருவேளை, தவிர்க்க முடியாதோ..?
மத்திய மாநில அரசின் திட்டங்கள் குறித்த கேள்விகளும் மிக அதிகம். மத்திய அரசின் குறிப்பிடத்தக்க திட்டங்களில் பெரும்பாலானவை இடம் பெற்று விட்டன! திருக்குறள் சார்ந்த வினாக்களில் இன்னும் ஆழம் இருந்திருக்கலாம். மேலோட்டமாய் அமைந்ததாய் ஓர் உணர்வு எழத்தான் செய்கிறது. தமிழ்த் தேவர்களுக்குத் திருக்குறளில் இவ்வளவு தெரிந்திருந்தால் போதும் என்கிற அணுகுமுறை சரியானதா…? திருக்குறளில் மிகவும் உயிரோட்டமான பகுதிகளுக்கா பஞ்சம்..? ஆணையம் சற்றே சிந்திக்கலாம். இதுவேனும் பரவாயில்லை; ஆங்காங்கே தென்படுகிற முரண்கள், பிழைகள், தவறான மொழியாக்கம்… திணறடிக்கின்றன.
ஏராளமாக இருக்கின்றன; ஒரு சில மட்டும் பார்ப்போம். ‘திமுக மக்களைத் தமிழர் என்ற அடையாளத்தால் ஒன்றிணைய வற்புறுத்தியது’. ஆங்கிலத்தில் இப்படி இருக்கிறது: It urged people to WRITE under Tamil identity. வேறொன்றுமில்லை, Unite என்பதுதான் write என்று அச்சாகி உள்ளது.
கேள்வித்தாளை ஒருமுறையேனும் சரிபார்க்க வேண்டாமா…? (நான் பார்த்த தாளில், கேள்வி எண் 121) மற்றொரு கேள்வியில் ‘The union executive consists of…’ தமிழில் இவ்வாறு தரப்பட்டுள்ளது – ‘மத்திய செயலாட்சித் துறையின் பகுதியாக இருப்பது..’ சாசனத்தில் வரும் Article என்கிற சொல்லுக்கு ஒரே கேள்வித்தாளில் வெவ்வேறு இடங்களில் ‘சரத்து’, உறுப்பு, விதி, பிரிவு என்று வெவ்வேறு சொற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
ஏன் இந்தக் குழப்பம்..? சாசனத்தில் உள்ள ஒரு சொல்லில் கூட ‘சீர்மை’ (uniformity) இல்லாமற் போனது ஏன்..? சட்டத்தில், சாசனத்தில்அடிக்கடி பயன்படுத்தப்படும் சாதாரண சொற்கள் கூட அதிகாரப்பூர்வ மொழியாக்கத்துக்கு உட்படாதது ஏன்..? அரசுத் தேர்வாணையம் இதனை இன்னும் தீவிரத்துடன் பரிசீலிக்க வேண்டும்.
சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக கேள்வித்தாள் குறிப்பிடுகிறது – ‘அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாகக் கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன’. இதற்கு மாறாக, ‘மங்களகரம் அல்லாத நேரங்களில் நடத்தப்பட்டன’ என்றே அமைந்து இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ‘auspicious’ என்று தவறுதலாக உள்ளதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து இருக்கின்றனர்!பல இடங்களில் தமிழ் மொழியாக்கம், ‘கரிம தீவிரம்’ ‘நிதிஒழுக்கம்’ என்றெல்லாம் மிகவும் இறுக்கமாக இருந்தது.
அதேசமயம், காக்கைகளுக்கு ‘நைவேத்யம்’ செய்யும் வழக்கம் என்றும் குறிப்பிடுகிறார்கள். ‘படையல்’ என்றால் எல்லாருக்கும் புரியுமே… ‘பட்ஜெட்’ என்றால் நிதிநிலை அறிக்கை. இதனை, ‘வரவு செலவு திட்ட அறிக்கை’ என்கிறது கேள்வித்தாள். இதைவிடவும் வேடிக்கை, ‘₹’ என்பதை நீக்கி, ‘ரூ’ என்கிற தமிழ் எழுத்து, ‘பட்ஜெட்’டில் பயன்படுத்தப் பட்டது என்று பெருமையுடன் கூறுகிறது! ‘துறைகள்’ என்று பன்மையில் தொடங்கி, ‘பார்க்கப்படுகிறது’ என்று ஒருமையில் முடிகிறது.
‘பெண்கள் உதவி எண்’, பொது விநியோக முறை குறித்த வினாக்கள்… யாராலும் இதைவிட மோசமாக வடிவமைக்க முடியாது. பொது விநியோக முறை பற்றிய கேள்வி ஆங்கிலத்திலும் தாறுமாறாகத்தான் இருக்கிறது. இத்தகைய முரண்கள், பிழைகள் மலிந்து கிடக்கின்றன.
யாரேனும் ஒருவர் சில மணித்துளிகள் செலவிட்டு இருந்தாலும் இந்தப் பிழைகளை களைந்திருக்க முடியும். ஒருவேளை இவையெல்லாம் பிழைகள் என்பதையே அறியவில்லையோ..? நிறைவாக, அத்தனை ‘சுவாரஸ்யம்’ இல்லை என்றாலும், இந்த எளிய கேள்வி நன்றாகவே இருக்கிறது: மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட நான்கு மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட இரண்டு மடங்கு அதிகமாக பெரியவளாக இருக்கும்போது மேரியின் வயது என்ன..? a) 20 b) 24 c) 28 d) 32 e) விடை தெரியவில்லை.