சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குருப்-4 தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை நடைபெறுகிறது. இத்தேர்வை தமிழகம் முழுவதும் 13 லட்சத்து 89,738 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 8 லட்சத்து 63,068 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், வனக்காப்பாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் 3,935 காலியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஏப்ரல் 25-ம் தேதி வெளியிட்டது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் மே மாதம் 24-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு: குருப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்ற போதிலும் இத்தேர்வுக்கு பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் பொறியியல் பட்டதாரிகள் என உயர் கல்வித்தகுதி உடையவர்களே அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்தனர். தேர்வுக்கு 13 லட்சத்து 89, 743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அதில் தகுதியில்லாத 5 பேரின் விண்ணப்பங்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டன.
5 லட்சத்து 26,553 ஆண்கள், 8 லட்சத்து 63,068 பெண்கள் 117 மூன்றாம் பாலினத்தவர் என 13 லட்சத்து 89,738 பேர் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் ஹால்டிக்கெட்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, குருப்-4 தேர்வு இன்று (ஜூலை 12) 3,034 மையங்களில் நடைபெற உள்ளது. சென்னை 311 தேர்வுக் கூடங்களில் 98,848 பேர் எழுதுகின்றனர். குருப்-4 தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார்.
தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணிக்கு முடிவடையும். தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தேர்வு மையத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் பொதுத்தமிழ் பாடத்தில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு, அடிப்படை கணிதம் ஆகியவற்றில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் அப்ஜெக்டிவ் முறையில் கேட்கப்படும். 3 மணி நேரத்துக்குள் விடையளிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்.
காலியிடம் அதிகரிக்கும்: குருப்-4 தேர்வுக்கு நேர்காணல் கிடையாது. எனவே, எழுத்துத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலே அரசு பணி வாய்ப்பு உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் 3,935 என்ற போதிலும் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.