சென்னை: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா என்பவர் பொது தரவரிசைப் பட்டியலில் (CRL) முதலிடம் பிடித்துள்ளார். அவர் 360 மதிப்பெண்களுக்கு 332 மதிப்பெண்கள் பெற்றார்.
நாடு முழுவதும் உள்ள ஐஐடி உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
மே 18 அன்று நடைபெற்ற ஜேஇஇ அட்வான்ஸ்டு 1 மற்றும் 2-ம் தாள்களை மொத்தம் 1,80,422 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் 54378 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் தேர்வு பெற்றவர்களில் 9404 பேர் பெண்கள் ஆவர்.
இந்த தேர்வில் ஐஐடி டெல்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் (CRL) முதலிடம் பிடித்துள்ளார். அவர் 360-க்கு 332 மதிப்பெண்கள் பெற்றார். ஐஐடி கரக்பூர் மண்டலத்தைச் சேர்ந்த தேவ்தத்தா மாஜ்ஹி பெண்களுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். 360-க்கு 312 மதிப்பெண்கள் பெற்ற இவர் பொது தரவரிசைப் பட்டியலில் 16ம் இடம் பெற்றுள்ளார்.