சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், அதே பள்ளியில் அவர்கள் 9-ம் வகுப்பு படிக்கும் வகையில், தற்காலிக ஏற்பாடு செய்திட வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும், அவர்களது பெற்றோரும் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு ஒன்றை அளித்தனர்.
மனு குறித்து அவர்கள் கூறியது: “சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் பயின்ற எங்களது பிள்ளைகள், தற்போது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் தொடர்ந்து பயில ஆர்வமுடன் உள்ளனர். இந்நிலையில், பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. எனவே, பிள்ளைகள் 9-ம் வகுப்பு பயில, சென்னையில் உள்ள அரசுப் பள்ளிக்குத் தான் செல்ல வேண்டும்.
ஆனால், செவ்வாய்பேட்டையிலேயே எங்கள் பிள்ளைகள் தொடர்ந்து பயின்றால், நாங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு உதவியாகவும் இருக்கும். வெகு தொலைவில் உள்ள சென்னையில் கல்வி பயில, பிள்ளைகளை அனுப்பினால், எங்களால் அவர்களை பராமரிக்கவோ, பார்க்கவோ முடியாத நிலை ஏற்படும்.
எனவே, பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக, செவ்வாய்பேட்டை பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளை தற்காலிகமாகக் கொண்டு வந்து, எங்கள் குழந்தைகளை இங்கேயே படிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். செவ்வாய்பேட்டை பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையத்திடம் உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் 14-ம் தேதி மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரை, எங்களது குழந்தைகளுடன் நேரில் சென்று சந்தித்து, கோரிக்கையை மீண்டும் தெரிவித்தோம். இது தொடர்பாக, மாற்றுத் திறனாளிகள் நல ஆணைய செயலாளரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
எனவே, பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, செவ்வாய்பேட்டை பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் எங்கள் பிள்ளைகள் 9-ம் வகுப்பு பயில, தற்காலிகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், பிள்ளைகளின் கல்வி தடைபடும் நிலை உள்ளது” என்றனர்.