செய்யூர்: செய்யூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு கலை கல்லூரியை முதல் வர் ஸ்டாலின் மே.26ம் தேதி (நாளை) திறந்து வைக்கிறார்.
தமிழக முதல்வர் பட்ஜெட் கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என ஆணையிட்டார். இந்நிலையில் மே 26ம் தேதி செங்கல்பட்டு, மாவட்டம் செய்யூரில் 270 மாணவ மாணவியர் பயிலும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், நேற்று செய்யூரில் கல்லூரி செயல்பட இருக்கும் இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண் டார். மேலும் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு உடனடியாக அவ்விடத்தை மேம்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் இக்கல்லூரி இடத்தை சுத்தப்படுத்தி சீர் செய்து மாணவ, மாணவிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அறிவுறுத்தினார்.
மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் கல்லூரி வளாகத்துக்கு பேவர் பிளாக் கற்கள் மூலம் வழித் தடத்தை உடனடியாக அமைத்து தர வேண்டும் என்றும், கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தருமாறும் அறிவுறுத் தினார். இதனைத் தொடர்ந்து கட்டிடங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுப்பணி துறையினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இதில் ஆட்சியர் ச.அருண்ராஜ் செய்யூர் எம்எல்ஏ மு.பாபு, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மண்டல கல்லூரி கல்வி இயக்குநர் மலர், வட்டாட்சியர் சரவணன். உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.