இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், முதல் குடியரசுத் துணைத் தலைவரும், தத்துவ மேதையுமான டாக்டர் ராதாகிருஷ்ணின் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறோம். தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த ராதாகிருஷ்ணன், நாடு முழுவதும் அவருடைய பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடும் அளவுக்கு முன்னுதாரணர்.
திருத்தணி அருகே சர்வபள்ளி கிராமத்தில், ஓர் ஏழைக் குடும்பத்தில் 1888 செப்டம்பர் 5இல் பிறந்தார் ராதாகிருஷ்ணன். ஆரம்பக் கல்வியைத் திருவள்ளூர், திருத்தணியில் படித்தார். தொடர்ந்து திருப்பதி லுத்தரன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பிறகு வேலூரில் உள்ள ஊரிஸ் கல்லூரியில் உயர்கல்வியை முடித்த ராதாகிருஷ்ணன், சென்னையில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் தத்துவவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து, படித்தார்.
உயர் கல்வியை முடித்த பிறகு சென்னை மாநிலக் கல்லூரியில் உதவி விரிவுரையாளர் பணி அவருக்குக் கிடைத்தது. பிறகு மைசூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகவும், பிறகு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டார். தொடக்க நாட்களி லிருந்தே தனது மாணவர்களிடையே மிகவும் பிரபலமானவராக ராதாகிருஷ்ணன் விளங்கினார்.
அந்த அளவுக்கு மாணவர் களோடு நெருக்கமாக இருந்தார். 30 வயதுக்குள்ளாகவே பேராசிரியர் பணியை அவர் அடைந்தது இன்னொரு சிறப்பு. அவர் எழுதிய ‘இந்திய தத்துவம்’ என்கிற நூல் மூலம் பல வெளிநாடுகளில் சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
முதலில் ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் (1931-36), பிறகு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (1939), 1946இல் யுனெஸ்கோவின் தூதர் என ராதாகிருஷ்ணன் சேவையாற்றினார். சுதந்திரத்துக்குப் பிறகு 1948இல் பல்கலைக் கழகக் கல்வி ஆணைய தலைவராக உயர்ந்து, பல பரிந்துரைகளை வழங் கினார். அவை உயர்கல்விக்கான சிறந்த கல்வித் திட்டத்தை உருவாக்க வழிவகுத்தன. சிறந்த கல்வியாளராக விளங்கிய அவர், நாட்டின் முதல் குடியரசுத் துணைத் தலைவராக 1952இல் தேர்ந்தெடுக்கப் பட்டார். பிறகு 1962இல் குடியரசுத் தலைவர் பதவியில் அமர்ந்தார்.
ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவரான பிறகு அவருடைய நண்பர்களும், மாணவர்களும் அவரின் பிறந்த நாளைக் கொண்டாட அனுமதி கேட்டனர். அப்போது, ராதாகிருஷ்ணன், ’என் பிறந்த நாளைத் தனித்தனியாகக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இந்தியாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக ஆசிரியர் தினமாகக் கடைப் பிடித்தால் அது எனக்குப் பெருமை யாக இருக்கும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது முதலே இந்தியாவில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினத்தை வெறுமனே பெயரளவில் கொண்டாடாமல், கற்பித்தலில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பெயரில் நல்லா சிரியர் விருதுகள் வழங்கி, மத்திய, மாநில அரசுகள் கௌரவிப்பது, ஆசிரியர் பணிக்கு மட்டுமல்ல, டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கும் செய்து வருகிற மரியாதை ஆகும்.