சென்னை: பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிவிப்பு வருமாறு: தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் செப்டம்பர் 15-ல் தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்படும். இதற்குரிய கால அட்டவணை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 10, 12-ம் வகுப்புக்கு காலையிலும், 11-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும்.
6, 8-ம் வகுப்புக்கு காலையிலும், 7, 9-ம் வகுப்புக்கு மதியமும் தேர்வு நடத்தப்படும். இதைத் தொடர்ந்து 6 முதல் 12-ம் வகுப்புக்கு செப். 27 முதல் அக்.5 வரை விடுமுறை வழங்கப்படும். இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்டோபர் 6-ம் தேதி திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.