சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதன்படி பத்தாம் வகுப்பில் 93.66 சதவீத மாணவர்களும், 12-ம் வகுப்பில் 88.39 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தில் 10-ம் வகுப்புக்கு பிப்.15 முதல் மார்ச் 18 வரையும், 12-ம் வகுப்புக்கு பிப்.15 முதல் ஏப். 4 வரையும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இவ்விரு தேர்வுகளையும் சுமார் 40 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இவ்விரு தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ ஒரேநாளில் நேற்று வெளியிட்டது.
12-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 19,299 பள்ளிகளைச் சேர்ந்த 16 லட்சத்து 92,794 மாணவர்கள் எழுதினர். அதில் 14 லட்சத்து 96,307 (88.39%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது சென்ற ஆண்டைவிட 0.41 சதவீதம் அதிகமாகும். மாணவர்கள் 85.70 சதவீதமும், மாணவிகள் 91.64 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். விஜயவாடா மண்டலம் 99.60 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் இருக்கிறது. 2, 3-ம் இடங்களில் திருவனந்தபுரம் (99.32%), சென்னை (97.39) உள்ளன. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வை 1,041 பள்ளிகளில் இருந்து 80,218 மாணவர்கள் எழுதியதில் 78,995 (98.48%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
10-ம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 26,675 பள்ளிகளைச் சேர்ந்த 23 லட்சத்து 71,939 மாணவர்கள் எழுதினர். அதில் 22 லட்சத்து 21,636 (93.66%) பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2024-ஐ விட வெறும் 0.06 சதவீதம் அதிகமாகும். மாணவர்கள் 92.63 சதவீதமும், மாணவிகள் 95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மண்டல வாரியாக 99.79 சதவீதம் பெற்று திருவனந்தபுரம் முதலிடத்தில் உள்ளது. 2, 3, 4-ம் இடங்களில் விஜயவாடா (99.79%), பெங்களூரு (98.90%), சென்னை (98.71%) உள்ளன. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வை 1,460 பள்ளிகளில் இருந்து ஒரு லட்சத்து 3,259 மாணவர்கள் எழுதினர். அதில் 1 லட்சத்து 3,117 (99.86%) பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தோல்வி அடைந்தவர்களுக்கான முன்னேற்றத் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும். விடைத்தாள் நகல் மறுகூட்டல் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.
முன்கூட்டியே தமிழக பள்ளி கல்வி 10-ம் வகுப்பு தேர்வு முடிவு: தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட திட்டமிட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்கான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. அமைச்சர் ஒப்புதல் அளித்தால் முடிவுகள் முன்கூட்டியே வெளியிடப்படும் என்றனர். தேர்வுகால அட்டவணைப்படி 10, 11-ம் வகுப்பு தேர்வு
முடிவு மே 19-ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.