சென்னை: சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ போன்றவற்றை பயன்படுத்தி ஏஐ செயலி உருவாக்கும் பயிற்சி வகுப்பு சென்னையில் நாளை முதல் 2 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவை (ஏஐ) பயன்படுத்தி செயலி உருவாக்குதல் குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு நாளை (ஆக.5) தொடங்குகிறது.
‘ஸ்ட்ராட்’ தொழில்முனைவோர் பள்ளியுடன் இணைந்து நடத்தப்படும் இந்த பயிற்சி முகாம் காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படும். இதில் சாட்ஜிபிடி, ஜெமினி ப்ரோ, நோட்புக் எல்எம், பயர்பேஸ், கிளைட், ஜேப்பியர், போல்ட், ரெப்லிட் போன்ற பிரபலமான தளங்களைக் கொண்டு ஏஐ இணையதளம் மற்றும் செயலிகளை உருவாக்குவது குறித்து நேரடி பயிற்சி வழங்கப்படும்.
மேலும் முன்னணி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் நோ-கோட், லோ-கோட் ஏஐ கருவிகள் குறித்தும், ஏஐ மாதிரிகளை உருவாக்குவது தொடர்பாகவும் செயல்முறை விளக்கம் அளிக்கப்படும். அதேபோல் ஏஐ மூலம் இயங்கும் இணையதளங்கள் மற்றும் செயலிகளின் செயல்பாடுகளை தெரிந்துகொள்ளுதல், பிரச்சினைகளுக்கு ஏஐ மூலம் தீர்வு காணுதல், கல்வி, மருத்துவம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் ஏஐ முன்மாதிரிகளை தயாரித்து முதலீட்டாளர்கள், ஆலோசகர்களுக்கு சமர்ப்பித்தல், ஏஐ சார்ந்த வணிகத்தை உருவாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் முகாமில் எடுத்துரைக்கப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் 18 வயது நிரம்பிய தகுதியுள்ள மாணவர்கள், பட்டதாரிகள், தொழில் தொடங்க விரும்புவோர், தொழில்முனைவோர் கலந்துகொள்ளலாம். முன்பதிவு அவசியம். கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்திலும், 95437 73337 மற்றும் 93602 21280 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டும் தெரிந்துகொள்ளலாம் என தமிழ்நாடு தொழில் முயற்சி மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.