சென்னை: சங்கர நேத்ராலயா எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனத்தின் 4-வது சர்வதேச பார்வை அறிவியல் மற்றும் ஒளியியல் மாநாடு (EIVOC) சென்னையில் நடைபெற்றது. கண் மருத்துவத் துறையில் முன்னோடி அடையாளமான சென்னை சங்கர நேத்ராலயாவின் ஒரு குறிப்பிடத்தக்க அங்கமான எலைட் ஸ்கூல் ஆஃப் ஆப்டோமெட்ரி 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இது முதல் முன்னோடி ஒளியியல் மருத்துவக் கல்லூரியாகவும், 4 ஆண்டு தொழில்முறை பட்டத்தை வழங்கும் முதல் கல்லூரியாகவும் விளங்குகிறது. எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச பார்வை அறிவியல் மற்றும் ஒளியியல் மாநாட்டை நடத்தி வருகிறது.
அந்த வகையில் இதன் 4-வது மாநாடு ஆக.15, 16, 17 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 60-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச கண்ணியல் நிபுணர்கள் வழங்கும் சொற்பொழிவுகளுடன் ஆப்டோமெட்ரி மற்றும் பார்வை அறிவியல் சமூகத்துக்கான உயர்தர தளத்தை அமைக்கும் மாநாடாக இது நடைபெற்றது.
“தொலைநோக்கு தலைமை: கண் பராமரிப்பின் எதிர்காலத்தை வடிவமைக்கும் கண் ஒளியியலாளர்கள்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்கள், முக்கிய மூக்குக் கண்ணாடி நிறுவனங்களின் வல்லுநர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். 60-க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினார். 10 புதிய பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
மேலும் புதிய இணையதளம், டிஜிட்டல் ஆய்வுக்கூடம், முக்கிய ஆப்டோமெட்ரி தகவல்களை வழங்கும் மொபைல் செயலி ஆகியவையும் வெளியிடப்பட்டன. தொடக்க விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய பயிற்சியாளரும் விஷன் 2020: பார்வை உரிமைக்கான நல்லெண்ணத் தூதருமான கிருஷ்ணமாச்சாரி காந்த் கலந்துகொண்டார். மறு நாள் நடைபெற்ற விளையாட்டு ஆப்டோமெட்ரி ஆய்வக அறிமுக விழாவில் காந்த் இணைய வழியாக பங்கேற்று தொடங்கி வைத்தார்.
சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் டி.எஸ்.சுரேந்திரன், ஆட்சிக் குழுத் தலைவரும் செயல் மருத்துவ இயக்குநருமான டாக்டர் கிரிஷ் ஷிவா ராவ், கவுரவ செயலாளர் ஜி.ராமச்சந்திரன், எலைட் ஆப்டோமெட்ரி கல்வி நிறுவனம், தி சங்கர நேத்ராலயா அகாடமி முதல்வர் மற்றும் மாநாட்டின் தலைமைப் பொறுப்பாளர் என்.அனுராதா உள்ளிட் டோர் பங்கேற்றனர்