சென்னை: மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கான (CUET) க்யூட் நுழைவுத் தேர்வுக்குரிய முடிவுகளை என்டிஏ வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் (க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி நடப்பாண்டு இளநிலை படிப்புகளுக்கான க்யூட் நுழைவுத் தேர்வு கடந்த மே 13 முதல் ஜூன் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது.
இந்த தேர்வெழுத நாடு முழுவதும் 13 லட்சத்து 54,699 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 10 லட்சத்து 71,735 மாணவர்கள் தேர்வெழுதினர். தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்த க்யூட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், க்யூட் தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது. அவற்றை மாணவர்கள் என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். பாடவாரியாக நடத்தப்பட்ட இந்த தேர்வில் 2,679 மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெற்று உள்ளனர். அதிகபட்சமாக ஒரு மாணவர் மட்டும் தான் தேர்வெழுதிய 5 பாடங்களில் 4-ல் சென்டம் பெற்றுள்ளார்.
தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகள் அவர்கள் விண்ணப்பித்த பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பிவைக்கப் பட்டுள்ளன. சேர்க்கை குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் அந்தந்த பல்கலைக்கழங்களை தொடர்பு கொள்ள வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் மாணவர்கள் 011 – 4075 9000 / 6922 7700 என்ற தொலைபேசி எண் அல்லது cuet-ug@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்புக் கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.