கோவை: வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுக்கல்விப் பிரிவு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு, தொழிற்கல்விப் பிரிவு இடஒதுக்கீட்டுக்கான இணையவழிக் கலந்தாய்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு 2025-26 கல்வியாண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கும் (வேளாண்மைப்பிரிவு) ஒரே விண்ணப்பம் வழியாக இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியிடப்பட்டது.
விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மறுமதிப்பீடு, மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைபேசி மாற்றம் அவற்றுக்கான சரிபார்ப்புப் பணிகள் கடந்த 26-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் இடஒதுக்கீடு, மாற்றுத்திறனாளி இடஒதுக்கீடு, சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கு நேரடி கலந்தாய்வு வரும் 14-ம் தேதி நடைபெறும்.
அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான இணையவழி கலந்தாய்வு இன்று (9-ம் தேதி) தொடங்கியது. இது வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். பொதுக்கல்விப் பிரிவு மற்றும் தொழிற்கல்வி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வும் இன்று தொடங்கி, வரும் 15-ம் தேதி வரை நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புப் பணி: 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று மாணவர் சேர்க்கையை உறுதி செய்த விண்ணப்பதாரர்களுக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 19-ம் தேதியும், 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் 29-ம் தேதியும், 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 6-ம் தேதியும், 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணி வரும் ஆகஸ்ட் 13-ம் தேதியும் நடைபெறும்.
பொதுக்கல்விப் பிரிவு, தொழிற்கல்விப் பிரிவு விண்ணப்பதாரர்களில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்தவர்களுக்கு வரும் 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை முதல் கட்டமாகவும், 31-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4-ம் தேதி வரை 2-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை 3-ம் கட்டமாகவும், ஆகஸ்ட் 19-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 4-ம் கட்டமாகவும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறும்.
துணைத் தேர்வின் மூலம் தேர்வானவர்களுக்கு இணையதள விண்ணப்பம் மற்றும் துணைக் கலந்தாய்வுக்கான தேதி, துணைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும். வரும் செப்டம்பர் 3-ம் தேதி கல்லூரி திறப்பு மற்றும் அறிமுக நாள் ஆகும். வரும் செப்டம்பர் 8-ம் தேதி உடனடி மாணவர் சேர்க்கை நடைபெறும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.