சென்னை: சென்னையில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை, கேப்டன் ஸ்ரீனிவாசமூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.
இதுதொடர்பாக, கேப்டன் ஸ்ரீனிவாசமூர்த்தி மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் எஸ்.சித்ரா கூறியதாவது: இந்திய மருத்துவத்தின் மேன்மையை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் வகையில், பிரத்யேகமாக ஆயுஷ் எனப்படும் துறை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மருத்துவ பரிசோதனை முகாம்: குறிப்பாக, நலமான பெண்கள், வளமான குடும்பம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மகளிர் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வகையிலான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்களை நடத்தியிருக்கிறோம். செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்திலும், சென்னை அரும்பாக்கத்திலும் அந்த முகாம்கள் நடத்தப்பட்டன. அதில் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு, ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன.
அதில் பாதிப்புகள் கண்டறியப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழிகாட்டுதல்களும், மருத்துவ கண்காணிப்பு உதவிகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பொது மக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் அதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக, சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை நகரில் இயங்கி வரும் அரசு பள்ளிகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கும் நேரில் சென்று கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டச்சத்து மாவு பெட்டகங்கள் வழங்கப்படும். அப்போது, குழந்தைகளின் எடை மற்றும் உயரம் பரிசோதிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் சத்து மாவு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.