சென்னை: அரசுப் பள்ளிகளில் பயிலும் எம்பிசி மாணவிகளின் ஆதார் எண் உட்பட விவரங்களை செப்டம்பர் 10-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: ‘அரசு, அரசு உதவி பெறும் கிராமப்புற பள்ளிகளில் 3 முதல் 6-ம் வகுப்பு வரை பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவிகள் இடைநிற்றல் இன்றி கல்வி பயில ஊக்கத் தொகை வழங்குவது குறித்து இணையவழியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்களை தொடர்பு அலுவலர்களாக நியமனம் செய்து விடுபட்ட விவரங்களை எமிஸ் தளத்தில் செப்டம்பர் 10-ம் தேதிக்குள் 100 சதவீதம் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, எமிஸ் தளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் 13,304 மாணவிகளுக்கு ஆதார் விவரம், 60,349 மாணவிகளுக்கு வங்கிக் கணக்கு எண், 45,498 மாணவிகளுக்கு ஆண்டு வருமானம் விவரங்கள் ஆகியவை பதிவு செய்யப்படவில்லை. இந்த விவரங்களை எமிஸ் தளத்தில் துரிதமாக பதிவுசெய்ய வேண்டும்.
மேலும், ஆதார் எண், வங்கிக் கணக்கு இல்லாத மாணவர்களுக்கு புதிதாக அஞ்சல் வங்கிக் கணக்கு தொடங்க அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகி சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.