சென்னை: தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து 4 புதிய தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன.
மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் (NIOS- National Institute of Open Schooling) பள்ளிக்கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது.
அந்தவகையில் நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம் – தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சேர்ந்து 4 தொழிற்கல்வி படிப்புகளை அறிமுகம் செய்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் என்ஐஒஎஸ் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா, பல்கலை. பொறுப்பு துணைவேந்தர் நரேந்திரபாபு சென்னையில் கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து என்ஐஒஎஸ் தலைவர் அகிலேஷ் மிஷ்ரா கூறியதாவது: தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தில் 10-ம் வகுப்புக்கு 39 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை தமிழ் உட்பட 19 மொழிகளில் மாணவர்கள் படிக்கலாம். பிளஸ் 2 வகுப்புக்கு 44 பாடங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பாடங்கள் இந்தி, ஆங்கிலம் உட்பட 7 மொழிகளில் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு இறுதிக்குள் தமிழ் மொழி கல்வி 12-ம் வகுப்பிலும் கொண்டு வரப்படும். இந்த கல்வி நிறுவனத்தின் 10 மற்றும் 12-ம் வகுப்பு சான்றிதழ்கள் அரசுப்பணி, உயர்கல்விக்கு தகுதியானவைகளாகும்.
ஆண்டுதோறும் ஏப்ரல்–மே மற்றும் அக்டோபர்–நவம்பர் என இருமுறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதனுடன், மாணவர்கள் விரும்பினால் இடைப்பட்ட காலத்திலும் பொதுத் தேர்வுகளை எழுதலாம். விருப்பமான பாடங்களை மாணவர்களே தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுவதுடன், தாய்மொழிகளிலும் தேர்வை எழுதவும் அனுமதி வழங்கப்படுகிறது. நீட், ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும். சாமானிய, எளிய பின்னணயை கொண்ட மாணவர்களும் இவற்றை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
தற்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலை,யுடன் இணைந்து கோழி வளர்ப்பு, மண்புழு உரம் தயாரிப்பு தொடர்பான 2 சான்றிதழ் படிப்புகளும், உணவு மற்றும் பானம் தயாரிப்பு, பேக்கரி மற்றும் மிட்டாய் தயாரிப்பு ஆகியவை தொடர்பான டிப்ளமோ படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்கப்படும்.
இதுதவிர உடற்கல்வி, இசை போன்ற துறைகளில் ஆர்வமுடன் இருக்கும் மாணவர்களுக்காக அவர்கள் துறைசார்ந்த பிரத்யேக படிப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அடுத்த கல்வி ஆண்டில் இவை அமலுக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனத்தின் இயக்குநர் (தொழிற் கல்வி) டி.என்.கிரி, சென்னை மண்டல இயக்குநர் வி.சந்தானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.