சென்னை: காலாண்டு, அரையாண்டுத் தேர்வு உட்பட பள்ளி செயல்பாடுகளுக் கான விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் 2-ம் தேதி திறக்கப்பட்டன.
இதற்கிடையே பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு வருகிறது. இதில் பள்ளியின் வேலை நாட்கள், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள், விடுமுறை, ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம், உட்படபல்வேறு விவரங்கள் அடங்கி யிருக்கும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2025-26) நாட்காட்டியை பள்ளிக்கல்வித் துறை நேற்று வெளியிட்டது.
அதன்விவரம் வருமாறு: 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்.18 முதல் 26 வரை நடைபெறும். அதன்பின் செப்.27 முதல் அக்.5 வரை காலாண்டுவிடுமுறை வழங்கப் படும். அதன்பின் அரையாண்டு மற்றும் 2-ம் பருவத்தேர்வு டிச.15 முதல் 23-ம் தேதி வரை நடத்தப்படும். தொடர்ந்து டிச.24-ல் தொடங்கி ஜன.5-ம் தேதி வரை மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.
அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 10-ம் தேதி முதல் தொடங்கும். பள்ளி வேலை நாட்கள் ஏப்ரல் 24-ம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப்ரல் 25-ம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாட்கள் 210 ஆக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டியில் 10, 11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வு தொடர்பான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்பட வில்லை. இதற்கான விரிவான தேர்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் ஆசிரியர்களுக்கு ஆண்டு முழுவதும் வழங்கப்பட உள்ள பயிற்சிகள், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி முகாம், மனநலப்பயிற்சிக்கான அட்டவணை உள்ளிட்ட விவரங்களும் இடம் பெற்றுள்ளன.