திருச்சி: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு மத்திய மனித வளத் துறை ரூ.385 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், திருச்சி வளாகம் அமைக்க எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யாதது கல்வியாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2009-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது திருவாரூர் மாவட்டம் திருநீலக்குடியில் 500 ஏக்கர் பரப்பளவில் மத்திய பல்கலைக் கழகம் அமைக்கப் பட்டது. அதன்பின், மத்திய பல்கலைக் கழகத்தை எளிதாக அணுகக் கூடிய வான் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, சாலை போக்கு வரத்து வசதியுடைய திருச்சியில் ஒரு வளாகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ள சூரியூர் பகுதியில் ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க தமிழக அரசு முன்வந்தது.
இதையடுத்து, நிலம் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.23 கோடியை மத்திய மனித வளத் துறை அமைச்சகத்திடம் பல்கலைக்கழக தரப்பு கோரியது. இந்நிலையில், திருவாரூர் மத்திய பல்கலை. வளாக உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ.385 கோடியை மத்திய மனித வளத் துறை அண்மையில் ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், திருச்சி வளாகத்துக்கு என்று நிதி ஒதுக்கீடு செய்யாதது கல்வியாளர்களிடம் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சி ஆர்வலர்கள் குழு செயற்குழு உறுப்பினர் ஜெகன்நாத் கூறியதாவது: திருச்சியில் மத்திய பல்கலைக்கழக வளாகம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சூரியூரில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், ஒரு ஏக்கர் ரூ.3 கோடி என கட்டணம் நிர்ணயம் செய்தது.
திருச்சியில் ஐஐஎம், ஐஐஐடிக்கு இலவசமாக நிலம் தந்த தமிழக அரசு, மத்திய பல்கலைக்கழகத்துக்கு மட்டும் நிலத்துக்கு பணம் கேட்பது ஏன் என்று தெரியவில்லை. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தை கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி என்பதால், திருச்சியில் வளாகம் அமைத்தால், திருச்சியை மையமாக கொண்டே மத்திய பல்கலைக்கழகம் செயல்பட தொடங்கிவிடும் என்ற அச்சமும் அவர்களிடம் இருக்கிறது.
திருச்சி போன்ற மாநிலத்தின் மையப்பகுதியில் அமைந்தால் தமிழகத்தின் அனைத்துப் பகுதி மாணவ, மாணவிகளும் பயன் பெறுவர் என்பதை தமிழக அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். இதற்கு மத்திய அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து திருவாரூர் மத்திய பல்கலை துணைவேந்தரிடம் கேட்டபோது,”மத்திய பல்கலை.யில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.385 கோடி மத்திய மனித வளத்துறை ஒதுக்கியுள்ளது. திருச்சியில் திறன் மேம்பாட்டு மையம் அமைக்க மத்திய மனித வளத்துறையிடம் ரூ.23 கோடி கேட்டுள்ளோம். விரைவில் தருவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.