திண்டுக்கல்: காந்திகிராம பல்கலை உலக ஆராய்ச்சி துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பல்கலை தனது பொன்விழா கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் நிலையில், எதிர்கால இலக்குகளை வகுக்க வேண்டியது அவசியம், என பல்கலை வேந்தர் கே.எம்.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையின் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலை துணைவேந்தர் என்.பஞ்சநதம் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். காந்திகிராம கிராமிய பல்கலை வேந்தர் கே.எம்.அண்ணாமலை தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லட்சுமணனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து வேந்தர் கே.எம்.அண்ணாமலை தனது பட்டமளிப்பு உரையில் பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளில் பல துறைகளிலும் காந்திகிராம கிராமிய பல்கலை அபாரமான முன்னேற்றம் பெற்றுள்ளது. வரவிருக்கும் காலங்களில் பல்கலை இன்னும் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற வேண்டும்.
காந்திகிராம பல்கலை பேராசிரியர்கள் உலகின் முன்னணி 2 சதவீத விஞ்ஞானிகளில் இடம்பிடித்திருப்பதும், அவர்கள் உலக ஆராய்ச்சிக்கு அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, இந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சர்வதேச ஆய்வகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் காந்திகிராமம் உலக ஆராய்ச்சி துறையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. பல்கலை தனது பொன்விழா கொண்டாட்டத்திற்குத் தயாராகி வரும் இந்நேரத்தில், எதிர்கால இலக்குகளை வகுக்க வேண்டியது அவசியம், என்றார்.
2023–24 மற்றும் 2024–25 கல்வியாண்டுகளில் படித்து முடித்த மாணவ, மாணவிகள் 2700 பேர் தங்கள் பட்டங்களை பெற்றனர். பட்டமளிப்பு விழாவில் திண்டுக்கல் எம்.பி., ஆர்.சசிதானந்தம், பதிவாளர் (பொ) எம்.சுந்தரமாரி, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.