சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி) சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை செயலர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ போன்றவை) சேருவதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசி-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பெண்களுக்கும் 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) கலை அறிவியல் கல்லூரிகளில் உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களிடமிருந்து வயது விதி தளர்வு கோரி கல்லூரி முதல்வர்கள் மற்றும் இணை இயக்குநர் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், எனவே, ஆர்வமுடைய மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவி பெரும், மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 40 என நிர்ணயித்து ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பான கல்லூரி கல்வி ஆணையரின் கருத்துருவை ஆய்வு செய்து 2025-2026-ம் கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் வயது தளர்வும் (45 வயது வரை), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் வயது தளர்வும் (43 வயது வரை) அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.