செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது மனிதர்களைப் போலவே அறிவுத் திறன் கொண்ட சிந்திக்கக் கூடிய, முடிவெடுக்கக்கூடிய கணினி அல்லது கணினி நிரலாக்கத்தை உருவாக்கும் கணினி அறிவியல் துறையின் புதிய வருகை. எடுத்துக்காட்டாக, பயனர் கேட்கும் தகவல்களைத் தேடித்தரும், கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் அமேசானின் ‘அலெக்சா’, கூகுள் ‘அசிஸ்டென்ட்’, மைக்ரோசாஃப்ட் டின் ‘கார்டனா’ போன்ற பிரபலமான டிஜிட்டல் மென்பொருள்கள் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் உருவானவை.
முக்கியமாகப் பயனரின் பழக்கவழக்கங்களைப் புரிந்து கொண்டு அதற்கேற்பச் செயல்பட்டு, எதிர்காலத்தில் அவரது ரசனை சார்ந்த பரிந்துரைகளை வழங்கும் திறனைப் பெற்றுள்ளன.
நவீன திறன்பேசிச் செயலிகளில், ஒளிப்பட வண்ணங்களைப் பின்னணியில் இருக்கும் மென்பொருள் தானாகத் திருத்தி மேம்படுத்துவது, கூகுள் போன்ற தேடுபொறிகளில் தேடும் போது டைப் செய்யத் தொடங்கியதுமே அந்தப் பதம் என்னவாக இருக்கும் எனப் பரிந்துரைப்பது போன்றவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உபயம். Elsa (English language Speech Assistant), Google Allo, Robin போன்ற செயலிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்டவையே.
தரவு அறிவியலும் பகுப்பாய்வும்: கட்டமைக்கப்பட்ட அல்லது கட்டமைக்கப்படாத பெருமளவு சேமிக்கப்படும் தரவுகளை ஒருங்கிணைத்து ஆராய்ந்து, பயன்படக்கூடிய தரவுகளைப் பிரித்தெடுத்து, தேவைக்கேற்ற புதிய தரவுகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளைத் தருவது குறித்த தொழில்நுட்ப அறிவியல்தான் தரவு அறிவியல் (Data Science).
தரவு அறிவியல், தரவுப் பகுப்பாய்வைக் (Data Analysis) கற்றுக்கொள்வதுடன் அதில் மென்பொருள் திட்டங்களை உருவாக்குவதற்கு பைத்தன் (Python) என்கிற மென்பொருள் மொழியைக் கற்றுத் தேர்ச்சிபெற வேண்டியது அவசியம். அத்துடன் டேட்டாபேஸ் பற்றித் தெரிந்துகொள்ள ‘எஸ்கியூஎல்’ என்கிற தரவுத்தள மொழியும் தெரிந்திருக்க வேண்டும்.அத்துடன் மட்லாப், மென்சார்ப் பனோ, ஜீலியா, ஸ்காலா போன்ற மொழிகளும் தேவைப்படலாம்.
‘மெஷின் லேர்னிங்’ – புரிதல், கற்றுக்கொள்ளும் முறைகளை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட துறை ‘மெஷின் லேர்னிங்’ எனப்படும் இயந்திரக் கற்றல். சில குறிப்பிட்ட பணிகளில் செயல்திறனை மேம்படுத்திக் கொள் வதற்கு, இதில் உள்ள தரவுகளைப் பயன்படுத்தும் முறைகளுக்குத் தேவையான இந்தத் தொழில்நுட்பம் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் ஒரு பகுதி யாகப் பார்க்கப்படுகிறது.
ஏ.ஐ. தரவு அறிவியல்: உற்பத்தித் துறை, இ காமர்ஸ், வங்கித் தொழில், நிதி, போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு என இப்படிப் பல்வேறு தளங்களிலும் ஏ.ஐ., தரவு அறிவியல் செல்வாக்கு செலுத்திவருகிறது. இதனால், கணினி அறிவியல் படிப்பில் ஆர்வமிக்க மாணவர்கள் ஏ.ஐ., தரவு அறிவியல் தொழில்நுட்பப் படிப்பைத் தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால், ஏராளமான கல்வி நிறுவனங்களில் இந்தப் படிப்பு தொடங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வி ஆண்டில் இளநிலைப் பட்ட நிலையில் இப்படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 7,049. 2024-25இல் இப்படிப்பில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 15,702ஆக அதிகரித்துள்ளது. எனினும், இந்தப் பாடப்பிரிவை நடத்தும் கல்லூரிகளில் தகுதி படைத்த ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்பதையும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்: சென்னை ஐஐடியில் டேட்டாசயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என்கிற நான்கு ஆண்டு பி.எஸ். படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்களும் டிப்ளமோ படித்த மாணவர் களும் சேரலாம். இதற்காக, ஐஐடிக்களில் சேருவதற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய அவசியமில்லை. நான்கு வாரப் பயிற்சிக்குப் பிறகு நடத்தப்படும் தகுதித் தேர்வில் தகுதிபெறும் மாணவர்கள் இப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இணையம் மூலம் நடத்தப்படும் இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களில் முதலாண்டுப் படிப்பை முடித்தவர்களுக்குச் சான்றிதழும், இரண்டாம் ஆண்டுப் படிப்பை முடித்தவர்களுக்கு டிப்ளமோவும் மூன்றாம் ஆண்டுப் படிப்பை முடித்தவர்களுக்கு பி.எஸ்சி. பட்டமும் நான்கு ஆண்டுப் படிப்பை முடித்தவர்களுக்கு பிஎஸ் பட்டமும் வழங்கப்படும்.
ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள்: சென்னை ஐஐடியில் ஏ.ஐ சான்றிதழ் படிப்புகளை ‘ஸ்வயம் பிளஸ்’ திட்டத்தின் மூலமாகக் கட்டண மின்றிப் படிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இயற்பியலில் ஏ.ஐ., வேதியியலில் ஏ.ஐ., கணக்கியலில் ஏ.ஐ., கிரிக்கெட் பகுப்பாய்வில் ஏ.ஐ., பைத்தனைப் பயன்படுத்தி ஏ.ஐ. / மெஷின் லேர்னிங் ஆகிய ஐந்து பாடப் பிரிவுகளில் இந்தச் சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது.
25 மணி நேரம் முதல் 45 மணி நேரம்வரை வழங்கப்படும் இந்த இணையவழிப் படிப்புகளில் இளநிலை, முதுநிலைப் பட்ட மாணவர்கள் மட்டுமல்லாமல் ஆசிரியர்கள், பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் போன்றோரும் சேரலாம். இந்தப் படிப்புகளில் சேர ஏ.ஐ.குறித்து அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும் விவரங் களுக்கு sway am2.ac.in/ai-for-all-courses என்கிற இணைய தளத்தைப் பாருங்கள்.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com