சென்னை: அரசு மாதிரிப் பள்ளிகளைத் தொடர்ந்து, அடுத்து வரும் ‘வெற்றிப் பள்ளிகள் திட்டம்’ ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கான பெரும் கனவுகளை வசமாக்கும் என்று பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் தெரிவித்தார். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்பித்தலை மேம்படுத்துவதற்காக மாதிரிப் பள்ளி திட்டம் 2021-22-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் மாவட்டத்துக்கு தலா ஒன்று வீதம் 38 மாதிரிப் பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறைகள், சிசிடிவி கேமரா, முழுமையான உப கரணங்களுடன் கூடிய அறிவியல் ஆய்வகம், டிஜிட்டல் கரும்பலகை, விளையாட்டு மைதானம், நுண்கலைத்திறன் பயிற்சி, உண்டு உறைவிட வசதிகள் என மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கட்டமைப்புகளும் ஒரே வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
இதற்கிடையே, இந்தப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் ஐஐடி போன்ற தேசிய அளவிலான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 1,878 மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ளனர். இதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இந்தத் திட்டத்தை ‘வெற்றிப் பள்ளிகள்’ எனும் பெயரில் வட்டார அளவில் கொண்டு செல்ல வேண்டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 414 வட்டாரங்களில் 500 வெற்றிப் பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு சிறந்த அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, அது வெற்றிப் பள்ளியாகதரம் உயர்த்தப்பட உள்ளன. மாதிரி பள்ளிகளில் உள்ளதைப் போன்ற நவீன வசதிகள் அங்கு ஏற்படுத்தப்படும். உண்டு, உறைவிட வசதிகள் மட்டும் இடம்பெறாது. அந்த பள்ளியில் வாரந்தோறும் உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடைபெறும்.
நீட்,ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சி வகுப்புகளில் அந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து பிளஸ் 2 மாணவர்களும் தங்கள் சுயவிருப்பத்தின்படி இணைந்து பயன்பெறலாம். இந்த வெற்றிப் பள்ளிகள் மூலமாக சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதற்காக பள்ளிக்கல்வித் துறை ரூ.111.37 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. அதில் முதல்கட்டமாக, இந்தாண்டு 236 வட்டாரங்களில் வெற்றிப் பள்ளிகள் தொடங்கும் விதமாக ரூ.54.73 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டில் எஞ்சிய 178 வட்டாரங்களைச் சேர்த்து மொத்தம் 500 வெற்றிப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் மாதிரிப் பள்ளிகள் திட்டம் சமமற்ற கல்வி முறையை ஊக்குவிப்பதாக என கல்வியாளர்கள் சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகனிடம் கேட்டபோது, “அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். அவர்களின் ஏழ்மையானது, கனவுகளுக்கு தடையாக இருக்கக் கூடாது. சாமானியனுக்கும் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான வாய்ப்புகளை எந்த தடையின்றி வழங்குவதற்காகவே இந்த மாதிரிப் பள்ளிகள் திட்டம் முன்னெடுக்கப்பட்டன.
அதை பரவலாக்கும் விதமாக ஒவ்வொரு வட்டாரத்திலும் வெற்றி பள்ளிகள் நிறுவப்பட்டு, மாதிரி பள்ளிகளுக்கு இணையானகட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித்தரம் மேம்படுத்தப்பட உள்ளது. திறமை மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை பெறுவார்கள்.
மேலும், அருகிலுள்ள பள்ளிகளுக்கு வழிகாட்டுதலையும் வழங்கி, ஒட்டுமொத்த தரத்தை உயர்த்த வழிவகுக்கும். படிப்படியாக அனைத்து பள்ளிகளையும் வெற்றிப் பள்ளிகளாக மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்படும். எனவே, இது சமமற்ற கல்வி முறையல்ல; ஏழை மாணவர்களின் பெரும் கனவுகளை வசமாக்கும் முயற்சி” என்றார்.