உலக அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்குச் செயற்கை நுண் ணறிவின் (ஏஐ) தாக்கம் முக்கியமான காரணமாகக் கூறப்படும் நிலையில், வேறு சில காரணங்களும் பணி நீக்கங்களுக்குப் பின்னால் மறைந்துள்ளன.
தகவல் தொழில்நுட்பத் துறைகளில் சில பணியாளர்களுக்கு பதிலாகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பயன்படத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, மென் பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை, தரவுப் பகுப்பாய்வு போன்ற பணிகளில் ஏஐ பயன்படுத்தப்படுவதால், இப்பணிகளைச் செய்துவந்த பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்துவருகிறது.
உண்மை என்ன? – ஆனால், ஏஐ மட்டுமே வேலையிழப்புக்குக் காரணம் அல்ல; வேறு சில காரணங்களும் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய பொருளாதார மந்த நிலை, முதலீட்டு நிதி குறைவு போன்றவையும் பணியாளர்களிடம் நிலவும் திறன் குறைவும் பணி நீக்கங்களுக்கான முக்கியக் காரணங் களாகக் கருதப்படுகின்றன.
திறன் அடிப்படையிலான பணியமர்த்தல் என்பது ஊழியர்களின் கல்வி, அனுபவம் அல்லது பொதுவான தகுதிகளை மட்டுமே பரிசீலிக்காமல், அவர்களிடம் உள்ள குறிப்பிட்ட திறன்கள் (technical skills, soft skills, problem-solving abilities), வேலைக்குத் தேவையான பண்புகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தேர்ந்தெடுக்கும் முறையாகும். இதில்தான் பலரும் பின்தங்குகிறார்கள்.
செய்முறைப் பயிற்சியில் மேம்பாடு: நமது கல்வி அமைப்பில் செய்முறைப் பயிற்சி களில் நிலவும் குறைபாடானது, அறிவுசார் கற்றலில் பலருக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்துகிறது. வெறும் மதிப்பெண்களை நோக்கி மாணவர்களைத் தயார் செய்யும்போது, திறன் சார்ந்த பயிற்சிகளில் பின்தங்குவதால் பணி இடங்களில் மாணவர்கள் ஜொலிக்கத் தவறுகின்றனர்.
பணியிடங்களில் ஊழியர்களுக்குத் திறன்குறைபாடு பல்வேறு காரணங்களால் ஏற்படு கிறது. முதலில், போதுமான பயிற்சியின்மை; புதிதாகப் பணியில் இணைந்த ஊழியர்களுக்குத் தேவையான திறன்களை மேம்படுத்த பயிற்சி வழங்கப்படாதபோது, அவர்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
தொழில்நுட்பப் பிரிவுகளில் போதிய அறிவுத்திறன் இல்லாததால், நவீனத் தொழில்நுட்பங் களைப் புரிந்துகொள்வதில் சில ஊழியர்கள் சிக்கலை எதிர்கொள்கின்றனர். தனிப்பட்ட ஆர்வமின்மையும் பணியில் நிலவும் உற்சாகமின்மையும் ஊழியர்களிடம் திறன் குறை பாட்டை அதிகரிக்கின்றன.
மேலும், ஊழியர்களின் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்பை வழங்காததும் ஊழியர்களின் திறமைகளுக்குரிய மதிப்பீடுகளையும் பாராட்டுகளையும் நிறுவனங்கள் வழங்காமல் இருப்பதும் பணியாளர்களிடம் ஏற்படும் திறன் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம் என மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, செய்முறைப் பயிற்சிகளை முறையாக அளிப்பதன் மூலமும் பணியாளர்களுக்குச் சரியான வழிகாட்டுதலை வழங்குவதன் மூலமும் அவர்களின் செயல்திறனைக் கல்லூரிகள் மேம்படுத்தலாம். பணியிடத்தின் சூழலை மேம்படுத்துவதன் மூலம், பணியாளர் களின் செயல்திறனை அதிகரிக்கலாம்.
செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்குகிறது. ஆனால், அவை உருவாக்கும் வேலைகளுக்குத் தேவையான திறன்கள் தற்போது பல பணியாளர்களிடம் இல்லை. இதை வளர்த்துக்கொள்ள போதிய திறன் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். செயற்கை நுண்ணறிவைச் சரியான விதத்தில் திறனுடன் பயன்படுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் தொழில்நுட்பத் துறையில் ஏற்படும் மாற்றத்தைப் பணியாளர்கள் எதிர்கொள்ள முடியும்.