நாடு முழுவதும் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்தவர்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் உறுதி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் ராகவ் லங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கடந்த 2024-25-ம் கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு பல்வேறு சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது. மத்திய, மாநில அரசுகள் மாணவர் சேர்க்கையை நடத்தின. பொதுவாக, கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேர்ந்தவர்களின் விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்கள் பதிவேற்ற வேண்டும். அந்த வகையில், 2024-25-ம் கல்வி ஆண்டில் இடங்கள் பெற்ற மாணவர்களில் 1,15,250 பேரின் விவரங்கள் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதை மாணவர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெயர்கள் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவ கல்வி இயக்குநரகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.