சென்னை: மருத்துவ படிப்பு, துணை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மருத்துவ படிப்புக்கு பிறகே துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 496 இடங்கள் 75 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்களும் உள்ளன. அதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
புதிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதாரத்துறை விண்ணப்பிக்காததால், கடந்த ஆண்டு இருந்த 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களே தமிழகத்தில் உள்ளன. அதனால் கடந்த ஆண்டை போலவே நடப்பாண்டும் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு ction.net/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது ஜூன் 6ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் நிறைவடைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் கம்ப்யூட்டர் முறையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தர வரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
துணை மருத்துவ படிப்புகள்: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபிடி, பிஏஎஸ் எல்பி செவித்திறன், பேச்சு மற்றும் மொழி, நோய் குறியியல் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் 2,500-க்கும் மேற்பட்ட இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் இடங்களும் அதில் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த இடங்களுக்கான 2025-26-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு www.tnmedicalselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது ஜூன் 17-ம் தேதி தொடங்கி ஜூலை 7-ம் தேதி நிறைவடைந்தது.
துணை மருத்துவ பட்டப் படிப்புகளுக்கு 68,319 பேரும், டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு 18,311 பேரும். பார்ம் டி (3 ஆண்டு) படிப்புக்கு 198 பேரும், ஆறு ஆண்டு படிப்புக்கு 13,048 பேரும் என விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். அதில், 90,661 பேர் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தரவரிசை பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு பிறகே, துணை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். அப்போது தான் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதவர்கள் துணை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு வசதியாக இருக்கும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.