திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து நடத்தி வரும் இலவச போட்டித் தேர்வு மையத்தில் பயின்ற விவசாயியின் மகள் குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, முதுநிலை வருவாய் உதவி ஆய்வாளர் பதவிக்கு தேர்வாகி உள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள திருராமேஸ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். விவசாயி. இவரது மகள் ஆர்த்தி. முதுநிலை பட்டம் பெற்றுள்ள இவர், கோட்டூரில் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நடத்திவரும் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தார்.
கடந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று, சமூக நலத்துறையில் இளநிலை உதவியாளராக குடவாசலில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தற்போது குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், நாகை மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக நியமன ஆணையை பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஆர்த்தி கூறியதாவது: திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து நடத்திவரும் இலவச போட்டித் தேர்வு மையத்தில் பயின்று குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக எம்எல்ஏ மாரிமுத்துவுக்கும், உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. அரசுப் பணியில் சேரும் நான் ஏழை, எளிய மக்களுக்கு மிகச் சரியான பங்களிப்பை செய்வேன் என்றார்.
போட்டி தேர்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் பாபு கூறியதாவது: இந்த மையத்தில் பயிற்சி பெற்றவர்களில் 3 பேர் குரூப் 2 தேர்விலும், 6 பேர் குரூப் 4 தேர்விலும், வேளாண்மை துறை ஏஏஓ பணியிடத்துக்கு இருவரும் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ளனர் என்றார்.