
வணக்கம், என் பெயர் முத்துமாரி. நான் ஒரு கூலித் தொழிலாளியின் மகள். எங்கள் வீட்டில் ஒரு நாள் வேலை கிடைத்தால் தான் அன்றைய இரவு உணவு உறுதி. அம்மா மாடுகளை மேய்த்தும், சிறுசிறு வேலைகளும் செய்து எங்களை வளர்த்தார். எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு கனவு — வக்கீல் ஆகணும். ஆனால் அந்த கனவுக்குத் திசை காட்ட யாரும் இல்லை. வழிகாட்டுதல் இல்லாமல், பின்புலம் இல்லாமல், எனது வீட்டின் சுவரில் “BA BL – LLB” என்று கிறுக்கி எழுதிக்கொண்டே அந்த கனவை உயிரோடு வைத்திருந்தேன்.
பத்தாம் வகுப்பு முடிந்ததும், குடும்ப சுமைகள் என்னை படிப்பை விட்டு சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் செல்லத் தள்ளியது. அந்த நாட்களில் நான் தினமும் கடையில் வேலை செய்தபோது மனசுக்குள் ஒரு கேள்வி மட்டும் – “என் கனவு இங்கேயே முடிந்துவிடுமோ?” ஆனால், உள்ளுக்குள் நம்பிக்கை இருந்தது. எனவே மீண்டும் படிக்க முயன்றேன்.

