விருதுநகர்: என்.சி.சி.யில் அதிக அளவில் மாணவிகளைச் சேர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக மதுரை என்.சி.சி. தலைமையக கமாண்டர் கர்னல் விகேஎஸ் சவ்கான் கூறியுள்ளார்.
விருதுநகர் கல்லூரி சாலையில் இயங்கி வரும் ராணுவ கேண்டீன் புதுப்பிக்கப்பட்டு குளிர் சாதன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதோடு, குளிர் சாதனம் பொறுத்தப்பட்ட காத்திருப்போர் அறை மற்றும் சிற்றுண்டி கேண்டீன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் என்சிசி மதுரை தலைமையக கமாண்டர் கர்னல் விகேஎஸ் சவ்கான் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கேண்டீனை திறந்துவைத்தார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில், “விருதுநகரில் உள்ள ராணுவ கேண்டீன் தற்போது புதுப்பிக்கப்பட்டு குளிர் சாதன வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த கேண்டீன் மூலம் ராணுவத்தினர் குடும்பத்தினர், முன்னாள் ராணுவத்தினர் சுமார் 3 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். இங்கு புதிதாக காத்திருப் போர் அறையும் குளிர் சாதன கருவிகளோடு திறந்துவைக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டி கேன்டீனும் திறக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவத்தினருக்கும் பொதுமக்களும் இதன் மூலம் சிறப்பான சேவை வழங்கப்பட்டு வருகிறது. மதுரை தலைமையகத்தின் கீழ் 11 பட்டாலியன்களில் சுமார் 26 ஆயிரம் என்சிசி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2,400 மாணவர் கள் உள்ளனர். என்சிசி-யில் மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகரிலும் கூடுதலாக என்சிசி மாணவர்களை சேர்க்கும் திட்டம் 2-ம் கட்டமாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. என்சிசி-யை மேலும் விரிவுப்படுத்தவும், கூடுதலான மாணவர்களை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு கட்டமாக இது விரிவுப்படுத்தப்படும். ஒரு சில பட்டாலியன்கள் ஏற்கனவே விரிவுப்படுத்தப்பட்டுள்ளன. விருதுநகரில் உள்ள 28-வது பட்டாலியனும் அடுத்த கட்டமாக விரிவுப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, என்சிசி மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும், பல்வேறு சிறப்பு முகாம்களில் பங்கேற்று சிறப்பாக செயலாற்றிய என்சிசி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து, 28-வது பட்டாலியன் என்சிசி அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 28வது பட்டாலியின் குரூப் கமாண்டர் கர்னல் ராகேஷ் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.