மதுரை: பள்ளிகளில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்ற பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாடு தேவையற்றது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
தென்காசி மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சிவகிரி எஸ்ஆர்பி நடுநிலைப் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்து நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த உத்தரவில், ஒரு பள்ளியில் குறைந்தது 250 மாணவர்கள் இருந்தால் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் அனுமதிக்கப்படும் என்று உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்துக்கு அரசு ஒரு வரம்பு வைத்திருப்பது ஆச்சரியமாகவும், கவலையாகவும் உள்ளது.
சோம்பேறித்தனமாக இருக்கும் குழந்தைகள் உருளை சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டே ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதால் அவர்களின் உடல் நிலை மட்டும் அல்ல, மனநிலையையும் பாதிக்க செய்கிறது. இதனால் குழந்தைகளுக்கு நீரிழிவு, மனச்சோர்வு போன்றவை அதிகரித்து வருகின்றன. சுறுசுறுப்பான மனதைக் கொண்டிருக்க சுறுசுறுப்பான உடல் தேவை.
பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி உடற்கல்விக்கு ஒரு நாளைக்கு 2 பாடப் பிரிவு வேண்டும். அப்படியிருக்கும் போது அரசின் இந்தக் கட்டுப்பாடு பொறுத்தமற்றதாக தெரிகிறது. எனவே, உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் தொடர்பான கல்வித் துறையின் முடிவு மிகவும் விசித்திரமானது. உடற்கல்வி இல்லாத ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் தொடர்பான அரசின் கொள்கை மற்றும் கட்டுப்பாடுக்கான காரணம் குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.