ஆர்யபட்டா செயற்கைக்கோள் மூலம் 1975இல் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் காலடி எடுத்து வைத்த இந்திய நாடு, தற்போது உலக அளவில் விண்வெளித் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அப்துல் கலாமிலிருந்து மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், கே.சிவன், வி.நாராயணன், கே.அருணன், வளர்மதி, வனிதா, நிகர் ஷாஜி போன்ற தமிழர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் தனிமுத்திரையைப் பதித்துத் தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்துவருகிறார்கள்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஆர்வமிக்க, திறமையான மாணவர்களை பிளஸ் டூ படித்த நிலையிலேயே ஈர்க்க வேண்டும் என்பதற் காக இஸ்ரோவின் சார்பில் திருவனந்தபுரம் வலியமலையில் இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட் (IIST) என்கிற நிகர்நிலைப் பல்கலைக் கழகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு ஏரோஸ்பேஸ் என்ஜி னியரிங், எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிக்கேஷன் என்ஜினியரிங் (ஏவியானிக்ஸ்) ஆகிய பாடப் பிரிவுகளில் பி.டெக். படிக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் என்ஜினியரிங் (டேட்டா சயின்ஸ்) பாடப்பிரிவில் பிடெக் பாடப்பிரிவு இந்த ஆண்டு தொடங்கப்பட் டுள்ளது.
அத்துடன், இளநிலைப் பட்டப் படிப்புடன் முதுநிலைப் பட்டப் படிப்பையும் சேர்த்து படிக்கும் வகையில் ஐந்து ஆண்டு டியூயல் டிகிரி படிக்கவும் வாய்ப்பு உண்டு. டியூயல் டிகிரி இளநிலைப் பட்டப் படிப்பில் பி.டெக். என்ஜினியரிங் பிசிக்ஸ் படிக்கும் மாணவர்கள் அஸ்ட்ரானாமி-அஸ்ட்ரோ பிசிக்ஸ் அல்லது சாலிட்ஸ்டேட் பிசிக்ஸ் பாடப்பிரிவுகளில் எம்.எஸ். படிக்கலாம். அல்லது எர்த் சிஸ்டம் சயின்ஸ் அல்லது ஆப்டிக்கல் என்ஜினியரிங் பாடப் பிரிவுகளில் எம்டெக் படிக்கலாம்.
பிளஸ் டூவில் கணிதம், இயற்பி யல், வேதியியல் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் இறுதித் தேர்வில் குறைந்தது 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி கள் குறைந்தது 65 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத்தேர்வில் முதல் ஆயிரம் இடங்களில் வரும் மாணவர்களில் 5 பேருக்குப் படிப்புக் கட்டணம் செலுத்து வதிலிருந்து விலக்கு அளிக்கப் படும். இந்த ஆண்டு படிப்பில் சேரும் மாணவர்கள் முதல் செமஸ்டரில் 9.0 சிஜிபிஏ (Cumulative Grade Point Average) அளவுக்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றால் அவர்களுக்கு அடுத்தசெமஸ்டரில் 50 சதவீத கட்டணச்சலுகை (10 சதவீத மாணவர்களுக்கு) கிடைக்கும்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் படிப்புக் கட்டணம் இல்லை. பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத் துக்குள் உள்ள மாணவர்களுக்குப் படிப்புக் கட்டணத்தில் சலுகை அளிக்கப்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர் களுக்கு விண்வெளித் துறை பணிகளில் ஈடுபடுவதற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு விண் வெளி ஆராய்ச்சி அமைப்புகளில் நேர்முகப் பயிற்சி பெறலாம்.
அத்துடன், சிறிய செயற்கைக் கோள் களை வடிவமைத்து உருவாக்கும் பணிகளிலும் இணைந்து செயல்பட, இளநிலைப் பட்ட மாணவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும். அத்துடன், சர்வதேசப்பயிற்சித் திட்டங்களின் கீழ் பல்வேறு நாடுகளில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக் கழகங்களிலும் ஆராய்ச்சி நிறுவனங் களிலும் சேர்ந்து பயிற்சி பெறலாம். இளநிலைப் பட்டப் படிப்பில் 7.5 கிரேடிங் பாயிண்டுக்கு மேல் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் நேரடியாக இஸ்ரோவில் சேரும் வாய்ப்பைப் பெறுவார்கள். தவிர, தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்திய விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப இன்ஸ்டிடியூட்டில் 16 பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் கேட் (GATE) தேர்வு எழுதி முதுநிலை பட்டப் படிப்பில் சேரலாம். இங்குள்ள அஸ்ட்ரானாமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு மட்டும் தனி நுழைவுத் தேர்வை (Joint Entrance Screening Test – JEST) எழுத வேண்டும்.
ஏரோநாட்டிக்கல் படிக்க மாற்று வாய்ப்பு: பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்காமல், ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கு, இந்திய ஏரோநாட்டிக்கல் சொசைட்டி (Aeronautical Society Of India) நடத்தும் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வு (ஏ, பி) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு இந்திய ஏரோநாட்டிக்கல் சொசைட்டி வழங்கும் சான்றிதழ், இந்தியப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் இளநிலைப் பட்டத்துக்குச் சமமாகக் கருதப்படும். கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் பிஎஸ்சி படித்தவர்களும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ படித்தவர்களும் இதில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு: www.aerosociety.co.in
ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங்: விமானங்களை ஓட்டுவது பைலட்டுகள் என்றால் விமானங்களை வடிவமைப்பதிலும் பராமரிப்பதிலும் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்த பொறியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. விமானம், ஹெலிகாப்டர் என்பதைத் தாண்டி செயற்கைக்கோள், ஏவுகணை, ராக்கெட் என விமானப் பொறியியலின் எல்லைகள் விண்ணைத் தாண்டி விரிவடையத் தொடங்கியதும், இத்துறை ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது.
அரசு, தனியார் விமான நிறுவனங்கள், விமானத் தயாரிப்பு நிறுவனங்கள், ஏர் டர்பைன் உற்பத்தி ஆலைகள், விமான வடிவமைப்புத் தொழிற்சாலைகள், பாதுகாப்புத் துறை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ), ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடட் (ஹெச்ஏஎல்), டிபன்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் லேபரட்டரீஸ், நேஷனல் ஏரோநாட்டிக்கல் லேப் (என்ஏஎல்) போன்ற நிறுவனங்களில் ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com