சென்னை: இளைஞர்களின் கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுக்கும் பணியை கலாம் சபா செய்து வருகிறது என்று ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு கூறினார். சென்னை வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியில் பிறந்தவர் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு. இவர் தனது இல்லத்தில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான ‘கலாம் சபா’ என்ற நூலகம் மற்றும் வழிகாட்டி மையத்தை நிறுவியுள்ளார்.
இதை கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்துவைத்தார். கலாம் சபா நூலகம் சார்பில் மாதாந்திர வழிகாட்டி கூட்டத் தொடரையும் டில்லிபாபு நடத்தி வருகிறார். சிறந்த ஆளுமைகளை அழைத்து, கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் அவர் நடத்தி வருகிறார். அதன் 7-வது நிகழ்வாக நேற்று ‘படிப்பது சுகமே’ என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன், ஆளுமை சிற்பி மாத இதழ் ஆசிரியர் மெ.ஞானசேகர் ஆகியோர் பங்கேற்றனர். இதில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு பேசியதாவது:‘கலாம் சபா’ செய்திகளை திரட்டி வைத்திருக்கும் நூலகமாகவும், வழிகாட்டி மையமாகவும், இளைஞர்களை ஒன்றுபடுத்தி, இந்தியாவை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்வது குறித்து யோசிக்கும் மையமாகவும் விளங்குகிறது.
இப்படிப்பட்ட சூழலில், பல துறைகளை சேர்ந்த ஆளுமைகளை அழைத்து பேச வைத்து வருகிறோம். கலாம் சபாவின் நோக்கம், இளைஞர்கள் அனைவரையும் விஞ்ஞானிகளாக மாற்றுவது இல்லை. அவரவர் என்னென்ன கனவுகளை வைத்திருக்கிறார்களோ, அந்த கனவுகளை எட்டுவதற்கான சிறகை தைத்துக் கொடுப்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.