சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு 4,200-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
தரவரிசைப் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படுகிறது. ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்புக்கு (BNYS) 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnayushselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் அவகாசம் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அந்த வகையில், 4,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த வாரம் தகுதியான மாணவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.