சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) இன்று வெளியிடப்பட்டது. தேர்வெழுதிய விண்ணப்பதாரர்கள் தங்கள் நீட் தேர்வு முடிவுகளை அதிகாரபூர்வ வலைத்தளமான neet.nta.nic.in மூலம் தெரிந்துகொள்ளலாம்.
நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. அதன்படி 2025-26-ம் கல்வி ஆண்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து இளநிலை நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இதன் முடிவுகளை neet.nta.nic.in, exams.nta.ac.in ஆகிய தளங்களில் அறிந்துகொள்ளலாம். அதேபோல அனைத்து விண்ணப்பதாரர்களும் மதிப்பெண் தகவல்களை தங்களின் மின்னஞ்சல் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
மேலும், மதிப்பெண்கள் தொகுக்கப்பட்டதன் அடிப்படையில் நீட் யுஜி 2025-க்கான இறுதி விடைக்குறிப்பையும் தேர்வெழுதியவர்கள் சரிபார்க்கலாம். இந்த தேர்வில் தகுதி பெற்றவர்கள் இந்தியா முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஸ் மற்றும் பிற இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கு நீட் தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும். அதன்படி 2024 ஆம் ஆண்டில், பொதுப் பிரிவு போட்டியாளர்களுக்கான தகுதி 50% ஆகவும், ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுகளுக்கான தகுதி 40% ஆகவும் இருந்தது. பொது-பிடபிள்யூடி பிரிவைச் சேர்ந்த போட்டியாளர்கள் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்கள் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.