கெலமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர், கழிப்பறை, குடிநீர், இரவு காவலர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தினசரி பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்தைத் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் அரசு மருத்துவமனையை ஒட்டி 4 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் பெண்கள் உயர் நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிகளில் கெலமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதில், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய கழிப்பறை, குடிநீர், சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக, போதிய கழிப்பறை இல்லாத நிலையில், இருக்கும் கழிப்பறையும் தண்ணீர் மற்றும் பராமரிப்பின்றி மூடி வைக்கப்பட்டுள்ளதால், பள்ளியின் பின்புறம் உள்ள ஏரியில் திறந்த வெளியில் மாணவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்கும் நிலையுள்ளது.
இரவு நேரக் காவலாளி இல்லாததால், இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு, வகுப்பறையில் உள்ள மின் விசிறி, மேசை உள்ளிட்ட உபகரணங்களைச் சேதப்படுத்திச் செல்வது தொடர்ந்து வருகிறது. வகுப்பறையின் ஜன்னல் பகுதி பின்புறம் மண் மேடாக உள்ளதால், அப்பகுதியிலிருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தி வருகின்றன. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் தினசரி பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது: அரசு ஆண்கள் பள்ளியில் போதிய கழிப்பிடம் இல்லாததால் அருகில் உள்ள ஏரிக்கு மாணவர்கள் செல்வதால், பாதுகாப்பற்ற நிலையுள்ளது. பள்ளி சுற்றுச்சுவர் கல்பலகைகளால் அமைக்கப்பட்டுள்ளதால், கல் பலகை இடைவெளி வழியக இரவு நேரங்களில் மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் குடிநீர் வசதி இல்லை. விளையாட்டு மைதானம் இல்லாததால் முறையான உடற்கல்வி கிடைக்காத நிலையுள்ளது.
இதுதொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்து, கிராமப் பகுதி மாணவர்களின் கல்வி எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு, பள்ளியில் அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளியின் நிலத்தை மீட்டு, பள்ளியில் விளையாட்டு மைதானம் உள்ளிட்ட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.