வேலூர்: இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம் என்று விஐடி பல்கலை. வேந்தர் கோ.விசுவநாதன் கூறினார்.
வேலூர் விஐடி பல்கலை.யின் 40-வது பட்டமளிப்பு விழா மற்றும் அப்துல் கலாம்-ஜெகதீஷ் சந்திரபோஸ் மாணவர் விடுதி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வேந்தர் கோ.விசுவநாதன் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் நிதியை கல்விக்கு ஒதுக்க வேண்டும். மத்திய அரசு பட்ஜெட்டில் 2.5 சதவீதம் மட்டுமே கல்விக்கு ஒதுக்கப்படுகிறது. அதேநேரத்தில், தமிழகம் 21 சதவீதத்தை கல்விக்கு ஒதுக்கி நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது.
புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கையை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை 8 கோடியாக உயர்த்த வேண்டும். இதற்கு அதிக உட்கட்டமைப்பு மற்றும் நிதி தேவைப்படுகிறது. இந்தியப் பல்கலை.கள் உலக தர வரிசையில் பின்தங்கியுள்ளன. விஐடி பல்கலைக்கழகம் 500-வது இடத்துக்குள் உள்ளது. முதல் 100 அல்லது 200 இடங்களுக்குள் வரவேண்டும். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற கல்வி வளர்ச்சி முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது, “உலகமயமாக்கல், வெளிநாட்டு நேரடி முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சிஉள்ளிட்டவற்றால் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் பன்மடங்கு உயர்ந்துள்ளன. மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருக்க வேண்டும். புத்தகங்கள்தான் அறிவைப் பெருக்க உதவுகின்றன. மாணவர்கள் ஒழுக்கமான நடத்தை மற்றும் செயல்கள் மூலம் நற்பெயரைப் பெற வேண்டும்” என்றார்.
விழாவில், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பேரிடர் மேலாண்மைத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். விஐடி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பென்டரெட்டி,உதவி துணைத் தலைவர் காதம்பரி ச.விசுவநாதன், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.