இந்தியாவில் இன்று பெண்களுக்கான பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருன்றன. பெண் ஆசிரியர்களும் அதிகளவில் உள்ளனர். ஆனால், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்பட்ட காலக்கட்டத்தில், பெண்களுக்கான முதல் பள்ளியை (1848) புணேயில் நிறுவினார் சாவித்திரிபாய் ஃபுலே. இதன் மூலம் இந்தியாவின் ’முதல் பெண் ஆசிரியர்’ என்கிற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார்!
மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகான் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரிபாய். அவருக்கு 9 வயது ஆனபோது, 12 வயதேயான ஜோதிராவ் ஃபுலேவோடு திருமணம் செய்து வைக்கப்பட்டது. சமூகச் சீர்திருத்த வாதியான ஜோதிராவ், தனது மனைவிக்குக் கல்வியை அளித் தார். சமூகப் போராட்டங்களிலும் பங்கேற்க வைத்தார்.
சாவித்திரிபாய், தான் கல்வி கற்றது மட்டுமன்றி, பெண்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று நினைத்தார். அதற்காக ஆசிரியர் பயிற்சியை மேற்கொண்டார். விரைவிலேயே பெண்களுக்கான ஒரு பள்ளியைத் தொடங்கி, அதன் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றார். சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மையைப் போக்க கல்வியே ஆயுதம் என்பதை அழுத்தமாக நம்பினார்.
1848இல் 9 மாணவியரோடு தொடங்கப் பட்ட முதல் பள்ளியை அடுத்து, மாணவி யரின் எண்ணிக்கை அதிகரித்தது. 1851இல் சுமார் 150 மாணவியரோடு 3 பள்ளிகளைச் சாவித்திரிபாய் நடத்தினாலும் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. தெருவில் நடக்கும்போது அவர் மீது சேற்றை அள்ளி வீசினார்கள். குப்பைகளைக் கொட்டினார்கள்.
எதைக் கண்டும் சாவித்திரிபாய் பின்வாங்கவில்லை. தொடர்ந்து தன் செயல்களைச் செய்து கொண்டே இருந்தார். 1852இல் ஆங்கிலேய ஆட்சியில் சாவித்திரிபாய்க்குச் ‘சிறந்த ஆசிரியர்’ விருது வழங்கப்பட்டது. பெண் விடுதலை, பாலினச் சமத்துவம், தீண்டாமை எதிர்ப்பு, உடன்கட்டை ஏறுதல் ஒழிப்பு போன்று சமூக நீதிக்காகப் போராடியது மட்டுமன்றி, கல்வியையும் வழங்கிய மகத்தான பெண்ணாகத் திகழ்கிறார் சாவித்திரிபாய்.
இதன் விளைவாக தொடர்ந்து, 1878இல் கல்கத்தா கல்லூரி களில் முதல் முறையாகப் பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, 1916இல் மும்பையில் பெண்களுக்கான முதல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. விடுதலைக்குப் பின் 1947இல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்விக்கான இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. 1890இல் ஜோதிராவ் இறந்தபோதும் தொடர்ந்து களத்தில் இயங்கிய சாவித்திரிபாய், 1897இல் தன் இறப்பு வரை பெண் கல்விக்காக அயராது உழைத்தார்.