சென்னை: அரசுப் பள்ளிகளில் 2,342 இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தகுதி பெற்று மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 2,342 பேர் கொண்ட தேர்வுப் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இவர்களுக்கான நேரடி பணி நியமன கலந்தாய்வு சென்னையில் நடத்தப்பட்டு ஆணை வழங்கப்படவுள்ளது. அத்துடன் தேர்வு செய்யப்பட்டவர்களின் வீட்டு முகவரியுடன்கூடிய பெயர்ப் பட்டியல் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பொருட்டு இடைநிலை ஆசிரியர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 14 முதல் 18-ம் தேதி வரை சென்னை சேத்துப்பட்டு எம்சிசி பள்ளி, கீழ்ப்பாக்கம் சிஎஸ்ஐ பெயின்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நேரடி முறையில் இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
முதல்வர் வழங்குவார்: னவே, ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் முன்னுரிமைப் பட்டியல் வரிசைப்படி கலந்தாய்வு நடைபெறும் நேரத்துக்கு முன்பாகவே மையத்துக்கு வருகை புரிய வேண்டும். தாமதமாக வருபவருக்கு அந்த நேரத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே தேர்வுசெய்து கொள்ள அனுமதிக்கப்படும். இதையடுத்து ,பணிநியமனம் பெறுபவருக்கு முதல்வர் ஸ்டாலின் நியமன ஆணைகளை வழங்குவார். அந்த விழா சென்னை பெரியமேடு நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 23-ம் தேதி நடைபெறும். இவ்வாறு தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.